Tuesday, December 31, 2013

திருப்பாவை # 30

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:






வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

பொருள்:பாற்கடலைக் கடைந்து அமுதளித்த மாலவனை, மாதவனை, கேசவனை, கோபாலனை, நிலவொத்த அழகு முக கோபியர்கள், அணி சூடிய அரிவையர்கள், மார்கழி நோன்பு முடித்து சென்று அந்த பெருமான் அருள் பெற்ற வரலாற்றை "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" பாடியருளினாள்.


மாலை சூடிய ஸ்ரீ வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் திருமகளாம் கோதை பாடிய இந்த தூயதமிழ் பாசுரங்கள் முப்பதையும் தவறாமல் நாளும் சேவிப்பவர்கள், மலையன்ன தோளன், செந்தாமரைக் கண்ணன், செல்வக் கோமான் கோவிந்தன் அருள் பெற்று அளவிலா ஆனந்தமும் அடைவர்.


கூர்ம அவதாரம்

நாம் எல்லோரும் உய்ய எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் பத்து அவற்றில் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரத்தை இந்த பாசுரத்தில் பாடியுள்ளார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தங்கள் குலம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட்ட தேவர்கள் தங்கள் குறையை பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டனர், அவரும் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் சென்றார். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு எய்தலாம் என்று மாலவன் கூறினார். தேவர்கள் மட்டும் பாற்க்கடலைக் கடைவது கடினம் என்பதால் அசுரர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்ய முதிவு செய்யப்பட்டது. மந்தார மலையை மத்தாக்கவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முடிவு செய்யப்பட்டது. திருமால தந்திரமாக தேவர்களை வால் பக்கமும், அசுரர்களை தலைப்பக்கமுமாக இருந்து கடையச்செய்தார். இவ்வாறு பாற்கடலைக் கடைந்த போது திருமால் ஆமை வடிவம் எடுத்து மந்தார மலையைத் தாங்கினார் என்பது புராண வரலாறு.

தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்த போது முதலில் கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் வந்தது, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தைக் கக்கியது. இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி உலகம் முழுவதையும் சூழ்ந்து, தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு அவர் கழுத்திலே தாங்கி தேவர்கள் முதல் அனைத்து ஜீவ ராசிகளையும் காத்தார். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட திருமகளை மஹா விஷ்ணு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வெளிப்பட்ட ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி,கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைர்வம் என்னுன் குதிரை ஆகியவற்றை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வந்தது மஹா விஷ்ணு, தன்வந்திரி வடிவில் ஏந்தி வந்தார். தேவரும், அசுரரும் அமுதம் முதலில் பெற குழப்பம் விளைவித்தனர், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார் திருமால். இவ்வரலாற்றை இந்த நிறைவுப் பாசுரத்தில் "வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை " என்று பாடுகின்றார் ஆண்டாள்.


"கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் பாடி நோன்பு நோற்பவர்கள் , திருமாலின் திருவருள் பெறுவர் என்று நூலின் ப்லனையும், நோன்பின் பயனையும் ஒருங்கே உணர்த்துவது போல், திருமால வங்கக் கடல் கடைந்து திருமகளைப் பெற்ற வரலாற்றுடன் திருப்பாவையை நிறைவு செய்கிறார் ஆண்டாள். 

ஆண்டாள் திருவடிகளே சரணம்திருப்பாவை முற்றும்


திருப்பாவை தனியன்கள்


கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


மாதங்களில் சிறந்த மார்கழியின் முப்பது பாசுரங்களையும்  வந்து வாசித்து இன்புற்ற அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் ஆண்டாள் திருவடிகளில் சமர்ப்பணம்.

அன்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு (2014) நல்வாழ்த்துக்கள்.

Labels: , ,

Tuesday, December 24, 2013

திருப்பாவை # 20

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:

ஸ்ரீ ஆண்டாள் சத்ய நாராயணப் பெருமாள் சேர்த்தி

முப்பத்துமூவர் அமரற்கு முன்சென்று
கப்பங்தவிர்க்குங் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..........(20)


பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தானே முன் சென்று அவர்களின் இடரை களையும் கண்ணா எழுந்திரு, நேர்மையானவனே! திறமையானவனே! பகைவரைப் பந்தாடும் பரந்தாமா! துயிலெழாய்.

( முப்பத்து மூவர் - பன்னிரண்டு சூரியர்கள், பதினோறு உருத்திரர்கள், அஷ்ட வசுக்கள், இரண்டு அக்னிகள் ஆகியோர் என்பாரும் உண்டு)

பொற்கலசம் போன்ற மெல்லிய மார்பகங்களையும், சிவந்த வாயையும் கொடி போன்ற மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை நங்கையே! திருமகளே! நீயும் துயிலெழாய்.

எங்கள் நோன்பிற்க்கு தேவையான விசிறியும் கண்ணாடியும் அளித்து உன் கணவனை மலர் கண்ணனை எங்களுடன் நீராட்ட அனுப்பு தாயே!


கண்ணாடி மற்றும் விசிறி கேட்பதின் உள்ளார்த்தம் - விசிறி என்பது மனதிலும், உடலிலும் உள்ள மாசை விசிறியபடி அகற்றவும், அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ஆத்ம ஸ்வரூபம் பார்க்க கண்ணாடியும் என்று கொள்ளலாம். மனித ரீதியாக நீராடிய பிறகு கண்ணாடி பார்த்துக் கொண்டு விசிறி கொண்டு கூந்தலை காய வைப்பதற்காக கேட்டதாகவும் கொள்ளலாம்.

நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.

Labels: , , ,

Sunday, December 22, 2013

திருப்பாவை #15

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:




எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ?போந்தாரை வந்தெண்ணிக்கொள்
வல்லானைக்கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.............(15)

பொருள்:
எழுப்புவோர்: ஏண்டி! கிளி போல் மிழற்றும் குமரியே! இன்னமும் உறங்குகின்றாயே!

எழாதிருப்பவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்:நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிந்திருக்கின்றோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

எழாதிருப்பவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்:: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ப் பார்த்துக் கொள்: குவாலயாபீடம் என்ற யானையை (வல்+யானை) கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.

குவலாயாபீடம் என்னும் யானையைக் கொன்றவன்:

கம்சனால் வஞ்சனையாக மதுராவிற்கு வரவழைக்கப்பட்ட கிருஷ்ண பலராமர்கள். கம்சன் அரண்மனை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மணை வாயிலில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த குவாலயாபீடம் என்னும் மதயானை கண்ணனைக் கொல்ல வந்தது. அந்த மாயன் மணிவண்ணன், ஊரார் அனைவரும் காணும் வகையில் அந்த யானையின் தந்தங்களை முறித்து, அதையே ஆயுதமாகக் கொண்டு யானையைக் கொன்றார். பகைவனது செருக்கையும் அழித்தார்.

இவ்வளவு ஆற்றல் படைத்தவன் நமக்கு எளியன் ஆனான். இதுவே அவன் மாயம். எனவே அந்த பரந்தாமனைப் பாடிக் கொண்டு பாவை நோன்பைக் கொண்டாடுவோம் என்று ஆயர் சிறுமியர் புறப்ப்டுகின்றார்கள் என்பதை,
"வல்லானை கொன்றானை" என்னும் பாசுர வரிகளில் புலப்படுத்தியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.

கோவிந்தன்:
ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா என்றும் "மாற்றாரை மாற்றழிக்க வல்லானை" என்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

Labels: , ,

Thursday, December 19, 2013

திருப்பாவை # 9

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:



தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரே? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! .........(9)


பொருள்:


தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம் அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர்கின்றன, அகில் முதலிய தூபம் மணக்கின்றன, சப்ர மஞ்ச கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து உறங்கும் மாமன் மகளே! எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

(மாமன் மகள் இவ்வாறு எழுப்பபட்டும் அவள் எழவில்லை;ஆதலால் அவள் தாயை அழைத்து அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்)

மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாததால் அவள் என்ன ஊமையா? அல்லது செவிடா? ; ஓயாத உறக்கமா? அல்லது ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கின்றாளா?


மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.

மாயம் என்பதற்கு பொது அர்த்தம் பொய் என்பது ஆனால் வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ஆச்சர்யம் என்று பெரியோர்கள் பொருள் கூறுவர். பக்தர்களை தனது சௌலபியத்தால் ஆச்சிரிசியப்படுத்துவதால் அவன் மாமாயன்.  

Labels: , , ,