Monday, April 26, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -20

Visit BlogAdda.com to discover Indian blogs
அஹோபில யாத்திரை

உக்ரஸ்தம்பம்


ஜ்வாலா நரசிம்மர் குகைக்கு எதிரே உள்ள குன்றின் உச்சியில் தான் உக்ரஸ்தம்பம் உள்ளது. ஆனால் மலைக்கு மேலே ஏறி செல்ல பாதை எதுவுமில்லை. ஜவ்வாது, கற்பூரம், தேக்கு மரங்கள் நிறைந்திருக்கின்றன இம்மலையில். அனைவரும் மலை ஏறவில்லை. முடிந்தவர்கள் மட்டும் ஏறினோம், பாதிபேர் திரும்பி சென்று விட்டனர் அவர்களை, வேன் ஓட்டுனர் திரு. சூரி அவர்கள் கூட்டிக்கொண்டு மடத்துக்கு சென்று விட்டார்.


அடியேனை அழைத்துச் சென்ற கயிலை தனுஷ்கோடி


எங்களுடன் சில பெண்களும் உக்ரஸ்தம்பம் ஏறினர். அம்புஜம்மாள் என்ற ஒரு மூதாட்டியும் எங்களுடன் கஷ்டப்பட்டு ஏறினார். அவர் தெலுங்கில் “நா தன்றி நின்னை சூசுகோசரம் பைக ஒஸ்துன்னானு நீவு தரிசனம் இய்யி, அதாவது “என் ஐயனே உன்னைக் காண நான் மேலேறி வருகின்றேன் உனது தரிசனம் தா” என்று வேண்டிக்கொண்டே ஏறினார். அவர் படும் கஷ்டத்தைக் கண்டு அந்த பெண்கள் மேலே ஒன்றும் இல்லை நீங்கள் ஏன் கஷ்டப்படுகின்றீர்கள். இங்கேயே இருந்து விடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அந்த அம்மாள் கூறிய பதில் ஒன்றுமில்லை என்று சொல்லவேண்டும் எல்லா இடத்திலும் பெருமாள் இருக்கின்றார் என்று அவர்களை அதட்டி சொன்னார். இது அன்று பிரஹலாதன் கூறிய பெருமாள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதுதானே. அப்படியே மேலே சென்று சேர்ந்து விட்டோம்.


முடியாமல் அந்த வயதான அம்மாள் மலையேறும் காட்சி ( மனோகரன்)


மேலிருந்து பார்த்தால் கருட மலை அப்படியே கருடன் போல் இரு இறகுகள் நடுவில் அஞ்சலி ஹஸ்தத்துடன் நிற்கின்ற கோலத்தில் அப்படியே தத்ரூபமாக காட்சி தந்தார். உச்சியின் உக்ரஸ்தம்பத்தின் கீழே பெருமாளின் பாதம் உள்ளது. சுவாமிகள் அருகில் செல்ல வேண்டாம் காற்று அதிகமாக உள்ளது என்று கூற அங்கிருந்தே பெருமாளை சேவித்தோம்.


செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றுடைய

எங்களீசனெம்பிரான் இருந்தமிழ் நூற்புலவன்

மங்கையாளன் மன்னுதொல் சீர் வண்டறைத்தார்க்கலியன்

செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர் தீதிலரே (10)


என்னும் திருமங்கையாழ்வாரின் கடைக்காப்பு பாசுரத்தை சேவித்தோம்.


பொருள் : சிவந்தகண்களையுடைய சிம்மங்கள் மற்ற மிருகங்களை அழியச்செய்து அவ்ற்றை எம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து தொழுது நிற்கும் சிங்கவேள் குன்றத்தில் உறைகின்ற, நம்மைப் போன்ற சம்சாரிகளுக்கு ஸ்வாமியும் எனக்கு உபகாரனுமான ஸர்வேஸ்வரன் விஷயமாக தமிழில் வல்ல வண்டுகள் மொய்க்கும் மலர் மாலை அணிந்த திருமங்கை மன்னன் தடக்கையன் அருளிச்செய்த செவ்விய மாலையை கற்க வல்லவர்கள் பொல்லாங்கு இல்லாதவர்கள் ஆவர்.


மேலிருந்து மலைக்காட்சி

இப்பகுதியிலேயே இது உயரமான இடம் என்பதால் செல் ஃபோன் இங்கு வேலை செய்தது. இந்த மேல் அஹோபிலத்தில் பாவன நரசிம்மரை சேவிக்க சென்ற போது ஓரிடத்தில் சிறிது நேரத்திற்கு வேலை செய்தது, பின் இங்குதான் வேலை செய்தது. அங்கிருந்தே வீட்டை அழைத்து அற்புத தரிசனம் செய்த தகவலை பகிர்ந்து கொண்டோம். பின் மெள்ள இறங்கினோம். என்ன ஆச்சரியம் அந்த பெருமாளை பூரணமாக நம்பி மேலே வந்த மூதாட்டி அந்த பெண்களுக்கு முன்பாக கீழே இறங்கி வந்து விட்டார். எல்லாரும் மடத்திற்கு கிளம்பினர் அடியேன் மட்டும் இன்னொரு தடவை ஜ்வாலா நரசிம்மரை சேவித்து விடலாம் என்று ஒடினேன். அவ்வாறு சென்ற போது ஐயனுக்கு வேத கோஷங்கள் முழங்க அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. வெளியே நின்று அவர் கொடுத்த அந்த அற்புத தரிசனத்தை கண்டு களித்து பின் அவசர அவசரமாக ஓடி வந்து மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு மடத்தை வந்து சேர்ந்தோம். ஒன்று கூட தவறவில்லை எல்லா தரிசனமும் திவ்யமாக கிடைத்தது அவரின் அருளினால். அதற்காக அஹோபில நரசிம்மரின் கோவிலின் முன் நின்று அவருக்கு கன்ணீருடன் நன்றி கூறினோம்.


இந்த யாத்திரையை நடத்தி திவ்யமாக சேவை செய்து வைத்த

இராமானுஜ தாசர் திருமலை சுவாமிகள்


மதிய உணவுக்குப்பின் கிளம்பி கீழ் அஹோபிலம் வந்தோம் . அங்கு அஹோபில புத்தகம், சி.டிகள் மற்றும் நினைவுப்பொருட்கள் வாங்கினோம். பின்னர் சென்னைக்காக கிளம்பினோம், வரும் வழியில் போத்தூர் வீர பிரம்மேந்திரர் ஜீவ சமாதி ஆலயம், மற்றும் தாலப்பாக்கம் அன்னமாச்சாரியார் பிறந்த இடம் சேவித்தோம். அன்னமாச்சாரியாரின் நினைவு மண்டபம், மற்றும் அங்கு கோவில் கொண்டுள்ள கேசவப் பெருமாளையும் தரிசித்தோம். உற்சவ மூர்த்திகளின் அழகே அழகு. இரவு சுமார் 1 மணி அளவில் சென்னை சேர்ந்தோம்.


கருட மலை உக்ர ஸ்தம்பத்திலிருந்து

இதுவரை யாத்திரையில் உடன் வந்தவர்கள் யாரையும் பற்றி எதுவும் சொல்லவில்லை. சென்னை நங்கநல்லூரை சார்ந்த திருமலை சுவாமிகள் இந்த யாத்திரையை நடத்திக் கொடுத்தார். வேன் ஓட்டுனர் சூரி, அடியேனை அழைத்து சென்று எல்லா துன்பங்களையும் ஏற்றுக் கொண்டவர் திரு. தனுஷ்கோடி அவர்கள். அவருடன் பணி புரியும் மனோகர், கந்தன், கோபால், தேவேந்திரன் ஆகியோர்களும் அவருடன் சேர்ந்து அடியேனுக்காக எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இராஜ சேகரர் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இவர்கள் இரண்டாவது தடவை இந்த யாத்திரைக்கு வந்தனர் என்பதால் அவர்களின் அனுபவமும் எங்களுக்கு உபயோகமாக இருந்தது. இவர்கள் அனைவருக்கும் அடியேனது நன்றிகள் உரித்தாகுக.


திரு இராஜ சேகர் மற்றும் திருமலை சுவாமிகள்


இயற்கையுடன் இயைந்து, ஆற்றில், அருவியில் குளித்து, ஆண்டவனை தரிசித்து, மலையேறி எந்த வித கவலையுமில்லாமல் ( செல் ஃபோன் கூட தொந்தரவு செய்யக் கூடாதென்றால் ) நிச்சயம் நீங்கள் அஹோபில யாத்திரையை மேற்கொள்ளலாம் ஒரு தெய்வீக உணர்வையும் பெறுங்கள்.


இது வரை இத்தொடரை வந்து தரிசித்து சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி

Labels: , ,

Sunday, April 25, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -19

Visit BlogAdda.com to discover Indian blogs
அஹோபில யாத்திரை

ஜ்வாலா நரசிம்மர் தரிசனம்


அரியுருவமாகி யெரிவிழித்து கொன்னவிலும் வெஞ்சமத்து கொல்லாதே, வல்லாளன் மன்னு மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து தன்னுடைய தாள் மேல் கிடாத்தி, அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த மின்னிலங்கு மாழிப்படை தடக்கை வீரனை இன்று சேவிக்கப்போகிறோம் என்ற ஆவலில் அதி காலை 5.00 மணிக்கே எழுந்து விட்டோம். இரண்டு நாட்களாக அஹோபிலத்தில் இருந்தும் பாவங்களை எல்லாம் போக்கி மறு பிறவி இல்லாமல் செய்யும் பவநாசினி ஆற்றில் குளிக்கவில்லையே என்று எங்களில் சிலர் பவநாசினி ஆற்றுக்கு குளிக்கச் சென்றோம். இந்த பவநாசினி ஆற்றைப்பற்றி அஹோபில ஷேத்திர மஹாத்மியத்தில் என்ன சொல்லியிருக்கின்றது என்று பார்ப்போமா?


பகவானின் திருவடியினின்றும் வெளிக் கிளம்பிய கங்கை இந்த மலையில் பவநாசினியாக அவதரித்தது. அஹோபில மார்க்கத்தை அடைந்து இந்தப் பவநாசினியைக் கண்ணால் பார்ப்பவன் கோடிக்கணக்கான பிறவியில் செய்த பாவத்தினின்றும் விடுபடுகிறான்.. விஷ்ணுவை நன்கு பூஜித்து அவரது பாத தீர்த்தமான இந்த பவநாசினி தீர்த்தத்தை தலையில் எவன் ப்ரோக்ஷித்துக் கொள்கிறானோ அவன் கங்கையில் ஸ்நானம் செய்த பலனை பெறுகிறான். இந்த தீர்த்தத்தைச் சுத்த மனத்துடன் கையில் எடுத்து இறைவனை ஸ்மரித்து ப்ரோக்ஷித்துக் கொள்பவன் எல்லா பாவங்களினின்றும் விடுபடுகிறான். இந்த தீர்த்தத்தை தலையால் தரித்து பருகுபவன் மனத்திலுள்ள அழுக்கை அகற்றுகிறான். முக்தியையும் பெறுகிறான். இந்த மாதிரி தீர்த்தத்தைக் குடிப்பவனைப் பார்த்தும் பித்ருக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். பிதாமகர்கள் கூத்தாடுகின்றனர். இந்தத் தீர்த்தத்தின் கரையை அடைபவனே எல்லா பிராயச் சித்தங்களையும் செய்தவனாக ஆகிறான். இந்தத் தீர்த்தத்தைக் கொண்டு சாலக்கிராம பூஜை செய்து, இதைப் பருகுபவன் பிரம்மஹத்தி முதலான பாபங்களினின்றும் விடுபடுகிறான். அந்த க்ஷணத்திலேயே பயனை அளிக்கவல்லது. இந்தத் தீர்த்தம், எல்லா மங்களங்களையும் கொடுக்க வல்லது. மனோ வியாதியையும் உடல் வியாதியையும் அழிக்க வல்லது. எல்லாவற்றுக்கும் மருந்து போன்றது இது. மேலும் துஷ்ட க்ரஹங்களின் கொடுமையையும் மாற்ற வல்லது. அந்த நரசிம்மரின் அருளினால் இவ்வளவு மகிமை வாய்ந்த பவநாசினி தீர்த்தத்தில் நீராடச் சென்றோம்.


பவநாசினி ஆற்றின் கரையோரம் ஜ்வாலா நரசிம்மரை

சேவிக்க செல்கின்றோம்


நேற்றே கவனித்திருந்தோம் அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் இரண்டு சிறு அருவிகள் இருந்தன மற்றும் க்ரோடா நரசிம்மர் சன்னதிக்கு அருகில் ஒரு குளம் போல ஆழமில்லாமல் இருந்தது. ஆயினும் காட்டாறு என்பதால் எப்போது வெள்ளம் வரும் என்று தெரியாது என்பதால் சற்று கவனமாகவே குளிக்க வேண்டும், நாங்கள் அருவியில் குளிக்க முடிவு செய்தோம். சிறு வயதில் எங்கள் ஊரின் அருகில் உள்ள திருமூர்த்தி அருவியில் குளித்தது பல வருடங்களுக்குப் பிறகு இப்போது இயற்கையுடன் இனைந்து ஒரு அருவியில் குளிக்கும் வாய்ப்பு கிட்டியது மனதார அருவியில் குளித்தோம். பின்னர் மடத்திற்கு திரும்பி வந்து அனைவருடனும் ஜ்வாலா நரசிம்மரை சேவிக்க கிளம்பினோம். ஆற்றின் ஒரமாகவே சென்றும் ஜ்வாலா நரசிம்மர் குகையை அடையலாம் அல்லது மாலோலன் சன்னதி அருகில் இருந்தும் இன்னோரு பாதை உள்ளது. நாங்கள் ஆற்றின் ஓரப்பாதையிலேயே சென்றோம். அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் மூலமாக ஆற்றைக் கடந்து அப்புறம் சென்று பவநாசினி ஆற்றின் ஓரமாக சென்றோன் சிறிது தூரம் சென்றதும் உக்ர ஸ்தம்பம் கண்ணில் பட்டது. ஹிரண்யன் அரண்மனையின் ஆயிரம் தூண்களும் அழிந்து போக வேத மலையின் உச்சியாக இந்த உக்ர ஸ்தம்பம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதன் தோற்றமும் ஒரு தூண் போலவே உள்ளது. ஆற்றின் நடுவே உள்ள பாறைகளில் கவனமாக சென்று குகைக்கு அருகே சென்றோம், குகைக்கு முன்னர் ஒரு அருவி கொட்டுகின்றது மட்டும் ஒரு ஆறு ஓடுகின்றது எனவே நாம் ஒரு பெரிய பாலத்தில் ஏறி ஆற்றைக் கடக்க வேண்டி உள்ளது. ஆகவே ஒரு வழி காட்டியுடன் செல்வதே உத்தமம்.


ஜ்வாலா நரசிம்மர் குகைக்கு அருகே உள்ள அருவி


ஜ்வாலா நரசிம்மர் குகையை நெருங்குவதற்கு முன் நாம் அந்த அருவியின் தாரைகளுக்கு பின் செல்ல வேண்டும், சேவார்த்திகளின் பாதுகாப்பிற்காக சங்கிலியால் தடுப்பு அமைத்துள்ளனர். அருவியில் நனைந்து சென்ற போது தன்னை சேவிப்பதற்கு முன் நம்மை தூய்மைப்படுத்துவது போல இருந்தது. அருவியைக் கடந்து குகையை நெருங்கினோம். குகை என்பதால் கோபுரம் எதுவும் இல்லை, குரங்குகள் தொல்லை அதிகம் என்பதாலோ என்னவோ குகைக்கு கம்பி வலை கொண்டு தடுப்பு அமைத்துள்ளனர். கதவும் இருந்தது ஆனால் பூட்டியிருக்கவில்லை. மிக்க ஆனந்ததுடன் உள்ளே சென்று பெருமாளை திவ்யமாக சேவித்தோம்.மூன்று கோலங்களில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். வலப்புறம் தூணைப் பிளந்து கொண்டு பிரகலாதனுக்காக நரசிம்ம ரூபத்தில் வெளியே வரும் கோலம். இடப்புறம் அசுரனுடன் சண்டையிட்டுக் கொண்டே அவனது தலைமுடியைப் பிடித்து வாசற்படிக்கு அவனை இழுத்துக்கொண்டு செல்லும் கோலம். நடுவாக எட்டு கரங்களுடன் சுகாசனத்தில் இரணியனை ஆகாயமும், பூமியும் அல்லாத தனது தொடையில் போட்டுக் கொண்டு எந்த ஆயுதமாகவும் இல்லாத தனது கூரிய நகங்களில் அவுணனது மார்பைப் பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொள்ளும் கோலம்.பெருமாளின் இடது திருக்கரத்தில் ஓங்கார ரூபியான சங்கும், வலது திருகரத்தில் மிளிரும் சுடராழியும் இலங்குகின்றன. இரு கரங்கள் அவனது பரந்த மார்பைக் கிழிக்கின்றது, இரு கரங்களினால் அவனது தலையையும் , காலையும் அவன் திமிறாத வண்ணம் பிடித்துக் கொண்டிருக்கிறார். மற்ற இரு கரங்களினால் அவனது குடலை மாலையாக அணிந்து கொள்ளும் கோலம். கோடிச் சூரிய பிரகாசத்துடன் விசாலமான நெற்றியும், தீர்க்கமான புருவங்களும், மிகவும் விலாசமான இரு கூற்றங்கொலோ என்னும் படியான ஜ்வாலையை கக்கும் கண்கள், நீண்ட மூக்கு, மதுராதர பல்லவம், கம்புக்ரீவம், விசால வக்ஷஸ்தலம், திரண்ட புஜங்கள், பிடரி மயிர், கோரைப்பற்கள், நாக்கு, கிரீடம், நெற்றிக் கண், வஜ்ர நகங்கள் அனைத்தும் அப்படியே தத்ரூபம். அன்று தன் பக்தன் பிரகலாதனுக்காக இரணியனை பிளந்த அதே கோலத்தில் இன்றும் சேவை சாதிக்கின்றார் ஜ்வாலா நரசிம்மர். அருகில் கை கூப்பி தன் வாக்கைக் காப்பாற்ற வந்து தன் தந்தையை வதம் செய்யும் கருணைக் கடலை கை கூப்பி வணங்கும் பிரகலாதன். சிறிதாக கையை கூப்பிய கோலத்தில் கருடன். ஹிரணியனின் கண்களில் பயத்தியும் அவன் கையில் உள்ள கேடயத்தையும் கூட காணலாம்.எங்கு பார்த்தாலும் இவர்கள்தான்


எவ்வளவு புண்ணியம் செய்திருந்தால் தங்களுடைய இந்த திவ்ய தரிசனம் இன்று சித்தித்தது என்று ஆனந்த கண்ணீருடன் மனம் உருகி அவர் முன் நின்றோம். கையில் எடுத்து சென்றிருந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினோம் அவர் சேவை சாதிக்கும் மேடையை தண்ணீர் ஊற்றி கழுவினோம். அனைவரும் கொண்டு வந்திருந்த நிவேதனப் பொருள்களை அவர் முன் சமர்பித்து இருளரிய சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளை யனைமேவி அஹோபிலம் என்னும் பெருநகருள் தெண்ணீர் பவநாசினி திரைக்கையாலடி வருட அமர்ந்த நாதனே, பூவில் நான்முகனைப் படைத்தவனே, கைம்மா துன்பம் கடிந்த பிரானே, கறந்த பாலுள் நெய்யே போன்றவனே, தேனும், பாலும், கன்னலும் அமுதுமாகி தித்தித்து என் ஊனிலுயுரிலுணர்வினில் நின்றவனே, பூந்துழாய் முடியானே, பொன்னாழிக்கையானே,அரியாகி இரணியனை ஆகம் கீண்டவனே, அவுணன் பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்த புனிதனே, தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி பேணாவவுணனுடலம் பிளந்திட்ட பெருமாளே, மஞ்சாடு வரையேழும், கடல்களேழும், வானகமும், மண்ணகமும், மற்றுமெல்லாம் எஞ்சாமல் வயிறடக்கி ஆலின் மேலோர் இளந்தளிரின் கண் வளர்ந்த ஈசனே, போரார் நெடுவேலோன் பொன் பெயரோனாகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு, குடல் மாலை சீரார் திருமார்பின் மேற் கட்டி,செங்குருதி சோராகக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி அரியுருவாய் ஆராவெழுந்தவனே, ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தானே, வேரிமாறாப் பூமேலிருப்பவளுடன்கூடிக் களித்திடும் பொன்னுருவனே, தன் பக்தனான பிரஹலாதனின் வார்த்தையை மெய்பிக்க இங்குளனங்குளெனனென்றுரைக்கக் கூடாமே எங்குமுளானாய் அற்புதமான ரூபத்துடன், நரங்கலந்த சிங்கமாய் ஹிரண்யனின் சபையிலுள்ள பெரிய ஸ்தம்பத்தில் தோன்றிய கருணா முர்த்தியே உன்னுடைய பெருமையை யாரால் கூறால் இயலும் என்றும்


புகுந்திலங்கும் அந்திப்பொழுதத்து அரியா

யிகழ்ந்த யிரணியதாகம் – சுகிர்ந்தெங்கும்

சிந்தபிளந்த திருமால் திருவடியே

வந்தித் தென்னெஞ்சமே வாழ்த்து


என்று பல ஸ்தோத்திரங்களை சொல்லி அவரிடம் சரணாகதி அடைந்து, பின் தேங்காய் பழம் உடைத்து சமர்பித்து கற்பூர தீபம் காட்டி பூஜையை நிறைவு செய்தோம். இவ்வாறாக அனைத்து நரசிம்மர்களின் தரிசனத்தையும் அவர் அருளினால் அற்புதமாக முடித்தோம்.அருவியின் பின் புறத்தில் இருந்து

ஜ்வாலா நரசிம்மரை வணங்குவதால் மறுமையில் முக்தி கிடைக்கும், இம்மையில் பேய், பிசாசு, பூத உபாதைகள் நீங்கும், மன சஞ்சலம் தூர விலகி ஒடும், கிரக தோஷங்கள் நீங்கும். கார்த்திகை மாதத்தில் நெய் அல்லது எண்ணெய் கொண்டு இவருக்கு விளக்கு ஏற்ற உடல் ஒளி பெறும், அழியாத ஞான விளக்கை மனதில் ஏற்றிக் கொண்டவனாவான். நீண்ட ஆயுள். கல்வி , ஸ்வர்யம் பெறுவான்.

இவ்வாறு அனைத்து நவநரசிம்மர்களையும் மேலும் கீழ் அஹோபிலத்தில் லக்ஷ்மி நரசிம்மரையும் திவ்யமாக சேவித்த மிக்க மகிழ்ச்சியுடன் வெளியே வந்தோம். அருகிலேயே இரணியனை வதம் செய்தபின் பெருமாள் கையைக் கழுவிக்கொண்ட இரத்த குண்டத்தை சேவித்தோம் அதன் நீரை பருகினோம். "அதிரும் கழல் பெருந்தோள் இரணியனாகம் பிளந்தரியாய் உதிரமளந்த கையோடிருந்தவன்" என்னும் பாசுரம் மனதில் வந்தது. அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு பெருமாள் உக்ர ஸ்தம்பத்தைக் தரிசிக்க சென்றோம்.

Labels: ,

Sunday, April 18, 2010

நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -18

Visit BlogAdda.com to discover Indian blogs
அஹோபில யாத்திரை

பிரஹலாதன் பள்ளி

குகை நரசிம்மர் தரிசனம்

குகை நரசிம்மர் சன்னதி அருகில் உள்ள அருவிமுன்னரே கூறியது போல க்ருத யுகத்தில் இம்மலைதான் ஆயிரம் தூண்கள் கொண்ட ஹிரணியன் அரண்மனையாக இருந்தது. ஆகவே அதன் அருகிலேயே பிரஹலாதன் குருகுலம் வாசம் செய்த இடமும் இருப்பது இயற்கைதானே. அனைவரும் காலையில் இருந்து மலை ஏறிக்கொண்டு இருப்பதால் களைப்பாகவே இருந்தோம் ஆயினும் பிரஹலாதன் பள்ளியை இன்றே பார்த்து விட்டால் நாளை ஜ்வாலா நரசிம்மரை தரிசித்து விட்டு உக்ரஸ்தம்பம் ஏறலாம் என்பதால் இன்றே மெதுவாக பிரகலாதன் குருகுலத்திற்கு புறப்பட்டோம்.
மேலே இருந்து கழுகுப்பார்வையில் மேல் அஹோபிலம்


செல்லும் வழியில் ஒரு பாதை ஜ்வாலா நரசிம்மர் சன்னதிக்கு செல்லுவதைப் பார்த்தோம். மரங்களின் வழியே ஒற்றையடிப்பாதையில் மேலே ஏறிச் சென்றோம். செல்லும் போது மேலிருந்து மேல் அஹோபிலத்தை கழுகுப்பார்வையால் பார்த்தோம். அஹோபில நரசிம்மர் திருக்கோயில், நாங்கள் தங்கிய மடம், அக்ரஹாரம், மண்டபம் அனைத்தும் தெரிந்தது, புகைப்படமும் எடுத்தோம். சுமார் அரை கி, மீ சென்ற பின், பிரகலாதன் மெட்டு என்னும் பிரகலாதன் படிகளில் இறங்கி பிரஹலாதன் படித்த பள்ளியைப் தரிசித்தோம்.
அங்கு ஒரு பள்ளத்தாக்கு போல இருந்தது ஒரு பக்கம் ஒரு அருவி அருமையாக வீழ்ந்து கொண்டிருந்தது, அருவியின் நீர் பள்ளத்தாக்கில் ஓடியது. பாறைகளில் ஜாங்கிரி ஜாங்கிரியாக எழுத்துக்கள் தெரிந்தன. மனிதர்களின் கால் பட்டு அநேகமாக அவை மறைந்து விட்டன. அப்படியே நடந்து ஆற்றைக் கடந்து குகை நரசிம்மரை தரிசனம் செய்தோம், குகை நரசிம்மருடன் மாருதியும் சேவை சாதிக்கின்றார். குகைக்கு செல்லும் படிகள் ஒருவர் ஏறும் அளவே உள்ளன. அதிலும் அருவித் தண்ணீர் விழுந்து வழுக்குகின்றது. பார்த்து பார்த்து ஒருவர் ஒருவராக சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்தோம். சிறிது நேரம் அங்கு ஒய்வெடுத்தோம் , பின் இறங்கி வந்து இரண்டாவது முறையாக அனைவருடனும் இனைந்து அஹோபில நரசிம்மரையும், செஞ்சு லக்ஷ்மித் தாயாரையும் சேவித்தோம்.


பிரகலாதன் பள்ளி்யில்வரங்கருதித் தன்னை வணங்காத வன்மை

உரங்கருதி மூர்க்கத் தவனை – நரங்கலந்த

சிங்கமாய் கீண்ட திருவடியிணையே

அங்கண் மா ஞாலத்தமுது என்று ஸ்ரீ நரஹரியின் திருவடிகளே உண்மையான அமிர்தம் என்று பற்றினோம்.


இன்று கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது. அருமையான தரிசனம் பெற்ற ஒரு நீண்ட நாள் முடிவுக்கு வந்தது. அருமையான நினைவுகளுடன் உறங்கச்சென்றோம். இவ்வாறு அஹோபில யாத்திரையின் இரண்டாம் நாள் மிகவும் நன்றாக நிறைவு பெற்றது். ஜ்வாலா நரசிம்மரையும் அவர் பிளந்து கொண்டு வந்த உக்ர ஸ்தம்பத்தையும் சேவிக்க சற்று பொருத்திருங்கள் அன்பர்களே.


Labels: ,