Thursday, December 29, 2011

நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -18

Visit BlogAdda.com to discover Indian blogs


  
ஸ்ரீ இராகவேந்திரர்

சுமார் ஒரு மணி நேரத்தில் மந்திராலயம் ரோட்டிலிருந்து மந்திராலயம் வந்து சேர்ந்தோம். அப்போது  ஆலய அலுவலகம் மூடப்படிருந்ததால் தனியார் ஹோட்டலுக்கு சென்றோம். நாங்கள் ஆலயத்தை கடந்த போது காலை சுப்ரபாத சேவை தொடங்கி விட்டிருந்தது. எல்லோரும் ஹோட்டலில் சென்று சிறிது நேரம் தூ‘க்கினோம். பின்னர் சுமார் 7 மணி அளவில் எழுந்து சிலர் துங்கபத்ராவில் நீராட சென்றோம். நவபிருந்தாவனத்தில் துங்கபத்ரா தூய்மையாக இருந்தது ஆனால் இங்கு பக்தர்கள் அதிகம் இருந்தனர் மற்றும் கரையோரம் மிகவும் அசிங்கம் செய்யப்பட்டிருந்தது, மேலும் பாறைகள் நிறைந்து காணப்பட்டது. ஆயினும்  துங்கபத்ராவில் குளித்து விட்டு இராகவேந்திரரை தரிசனம் செய்ய  வந்தோம். இந்த மாஞ்சாலாவில் குரு இராகவேந்திரர் தமது பிருந்தாவனத்தை அமைக்க தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை நாம் முதலிலேயே பார்த்தோம் அதாவது பிரகலாதராக இருந்த காலத்தில் இவர் யாகம் செய்த இடம் இது.

இனி இவ்விடத்தை இவர் பெற்ற சுவையான வரலாற்றைப் பார்ப்போமா?  பல்லாண்டுகள் பல நூல் களைப் பயின்று சரஸ்வதி கடாட்சம் பெற்ற ராகவேந்திரர், தம் வாழ்வில் நிகழ்த்திய ஓர் அற்புதம் அவரது பேராற்றலை மட்டுமல்ல; அவரது பெருங்கருணையையும் புலப்படுத்தும் அற்புதமான வரலாறு அது. ஆதோனி  என்ற ஊரில் வெங்கண்ணா என்ற ஒரு பிராமண சிறுவன் சிறு வயதிலேயே தனது  தாய் தந்தையை இழந்தான். எனவே அவனது தாய் மாமனிடம் வந்து சேர்ந்தான். தனது மருமகனின் சொத்துக்களை எல்லாம் கவர்ந்து கொள்ள விரும்பிய அவர் அவருக்கு முறையான கல்வி அளிக்காமல் அவரை மாடு மேய்க்க அனுப்பினார்.  மாடு மேய்ப்பது என்பது இழிவான தொழிலா? இல்லை இல்லை கிருஷ்ணபகவானும் மாடுதானே மேய்த்தார் என்று தான் அதற்கு மறுத்தால் தனக்கு கிடைக்கின்ற சோறு கூட கிடைக்காது என்று தனது விதியை நொந்து கொண்டு மாடு மேய்த்து வரலானார்.
 


இவ்வாறு அவன் மாடு மேய்த்து வரும் போது ஒரு நாள் பூரண சந்திரனை ஒத்த தேஜஸுடன் ஒரு சந்நியாசி அந்த வழியாக தனது சீடர்களுடன் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அவரைக் கண்டவுடன் அவனது மனதில் பால் வார்த்தது போல இருந்தது. ஒடிச் சென்று அவரது பாதரவிந்தங்களில் சரணமடைந்து தேம்பித் தேம்பி அழலானான். சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவது என்பது மகான்களின்  இயல்பாக  குணம்  அல்லவா?  ஆகவே  அவனை பரிவுடன் எழுப்பி அவனது கதையைக் கேட்ட குரு இராகவேந்திரர் ஆசிர்வாதம் செய்து  மந்திர அக்ஷதையை வழங்கி உனக்கு இன்னல் ஏற்படும் சமயத்தில் என்னை நினைத்துக்கொள் நான் உன்னை காப்பாற்றுவேன் என்று அபயம் வழங்கினார் கருணை வள்ளல் வாயு குரு ராயரு. 

மந்திராலய ஹனுமன் 


இப்பதிவில் உள்ள சில படங்கள் இப்பதிவில் இருந்து பெறப்பட்டன

diwan-venkanna-moola-brindavana

பல வருடங்கள்  உருண்டோடின  இளைஞனான  வெங்கண்ணா நல்ல வெயில் நாளில்  மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது  அவ்வழியாக சித்தி மசூத்கான்  குதிரையில் சென்று கொண்டிருந்தான். பீஜப்பூர் சுல்தானின் சிற்றரசன் அவன். அப்போது இன்னோரு குதிரை வீரன் மின்னல் வேகத்தில் வந்து அவனிடம் ஒரு ஓலையை கொடுத்து விட்டு சென்றான்.  அதை படிக்க ஆளைத் தேடிய போது அவன் கண்ணில் பட்டான் . உடனே அவனிடம் சென்று இந்த ஓலையைப் படித்து சொல் என்று  அதிகாரத்துடன் கூறினான். வெங்கண்ணாவிற்கு கையும் ஒடவில்லை காலும் ஓடவில்லை தானோ படிப்பறிவில்லாத முட்டாள்  தன்னிடம் வந்து இவர் ஓலையைப் படிக்க சொல்கிறாரே இப்படி இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நின்ற போது இறையருளால் அவருக்கு சந்நியாசியின் ஞாபகம் வந்தது. ஐயா அன்று ஆபத்துக் காலத்தில் என்னை நினைத்துக்கொள் என்று கூறிவிட்டு சென்றீரே இன்று இந்த இக்கட்டான  சமயத்தில் தாங்கள்தான் காக்க வேண்டும் என்றும் மனமுருக வேண்டி நின்றான்.

 
அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது குருவருளால் வெங்கண்ணாவிற்கு எழுத்துக்கள் எல்லாம் ஸ்பஷ்டமாக படிக்க முடிந்தது. அவன் போரில் நவாப் வெற்றி பெற்ற நல்ல செய்தியை அவனுக்கு கூறினான். அதனால் மனம் மகிழ்ந்த அவன் வெங்கண்ணாவை இப்பகுதியின் திவானாக நியமித்து கௌரவித்தான்.  இராகவேந்திரனின் கருனையினால் எழுதப் படிக்கதெரியாத தான் படிக்க முடியாத தான் படிக்க முடிந்தது என்ற உண்மையை  திவான் வெங்கண்ணா நவாபிடம் கூறினான். அவனும் வெங்கண்ணாவின் தாய்மாமனிடம் இந்த   உண்மையை உறுதி செய்து கொண்டு இராகவேந்திரரை பரிசோதிக்க அவர் கும்பகோணத்தை விடுத்து மாஞ்சாலியில் இருக்க முடிவு செய்து ஆதோணி வந்து  வெங்கண்ணா இல்லத்தில் மூல ராமருக்கு பூஜை செய்து கொண்டிருந்த போது வந்தான்.

 
அப்போது இராகவேந்திர சுவாமிகள் மூலராமருக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நவாப் மாமிசம் கொண்ட ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்பித்தான். அதை இராமருக்கு பூஜை செய்து முடித்தபின் தண்ணீர் தெளித்து திருப்பிக் கொடுத்தார் குருதேவர். துணியை எடுத்துப் பார்த்த நவாபிற்கு ஒரே அதிர்ச்சி தட்டில் இருந்தவை பழங்களும்  மலர்களும். குரு இராகவேந்திரரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும்  கேட்க வேண்டினான்.  அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார்.  நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த வறண்ட பூமி வேண்டாம்,  வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். ஆயினும் இராகவேந்திரர்   அன்மீக சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி   சாசனம் செய்து குருதேவரை வணங்கி சென்றான். 

 
 அலங்கார வளைவு
பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான வெங்கடரமண சுவாமிக்கு  ஒரு ஆலயமும் எழுப்பினார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு வரத்தொடங்கினர். இந்த கிராமத்தின் கிராம தேவதை மாஞ்சாலியம்மன். அவர் இராகவேந்திரரிடம் சென்று  தாங்கள்  வந்த பிறகு என்னை மறந்து விடுவார்களே என்றபோது, இராகவேந்திரர்  என்னை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் உன்னை தரிசனம் செய்த பிறகுதான் என்னை தரிசனம் செய்வார்கள் என்று வரம் தந்தார் பரம கருணாமூர்த்தி குரு ராயரு. என்ன சுவையாக இருந்ததா? குரு மாஞ்சாலி கிராமத்தை பெற்ற வரலாறு.

  இராகவேந்திரர் ஸ்தாபித்த
வெங்கடரமண சுவாமி 

மாஞ்சாலம்மன் 

  
புனருத்தாரணம் செய்யப்பெற்ற
மாஞ்சாலம்மன் ஆலயம் 
 
காமதேனுவும் கற்பக விருக்ஷமுமான குரு ராயரை தரிசனம் செய்வதற்கு முன்னர்  மாஞ்சாலம்மாவை தரிசனம் செய்ய வேண்டும் என்பதனால்  நாங்கள் அங்கு சென்று வரிசையில் சென்று நின்றோம். இராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு இடப்பக்கம், துங்கபத்ராவில்  இருந்து வரும் பக்கத்தில் அமைந்துள்ளது மாஞ்சாலம்மா ஆலயம். தற்போது புணருத்தாரணம் செய்யப்பெற்று எழிலாக விளங்குகின்றது அம்மனின் ஆலயம்.  காலை நேரம் என்பதால் கூட்டம அதிகமாகவே இருந்தது.  அம்மனின் தரிசனம் அருமையாக கிடைத்தது நம்மூரில் மாரியம்மன் ஆலயத்தில்  இருப்பது போல் மூன்று அடுக்கில் அம்மன் அருள் பாலிக்கின்றாள். அம்மனிடன் அனுமதி பெற்றுக்கொண்டு குருராஜரை தரிசிக்கச் சென்றோம். 700 வருடகாலம் பிருந்தாவனத்தில் இருந்து அருள்பாலிப்பேன் என்று அருளியபடி இராகவேந்திரர் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி பலவித அற்புதங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்.  நுழைவாயிலில் அப்பணாச்சாரியார் அருளிய         
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச|
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||  என்ற ஸ்லோகம் நம்மை வரவேற்கின்றது. உள்ளே நுழைந்து  பிருந்தாவனங்களை சுற்று வந்து தரிசனம் செய்ய சென்ற போது ஒரு அருமையான சம்பவம் நடந்தது. கோவிலுக்கு செல்லும் போது நாங்கள் எப்போதும் வேஷ்டி அணிந்து சட்டை அணியாமல்தான் செல்வோம். பொது தரிசனத்திற்காக சென்ற எங்களை கூப்பிட்டு வேஷ்டி அணிந்திருப்பதால்  சிறப்பு  வழியில் செல்லுங்கள் என்று அவர்களாக அனுப்பி வைத்தது அந்த குரு தேவரின் கருணைதான்.  வாயு குருவுக்கு மிக அருகில் உள்ள வாயிலில் சென்று அருமையாக இராகவேந்திரரை மனமார வணங்கினோம் . எதிரே கல்லில் மந்திராலய ஹனுமனையும் அருகில் உள்ள சிவலிங்கத்தையும் தரிசனம் செய்தோம். குருநாதருக்கு இடப்பக்கம் உள்ள வாதீந்திர தீர்த்தரின் பிருந்தாவனத்தையும் தரிசனம் செய்து வணங்கினோம்.

 
 பிருந்தாவன விமானம்

வாதீந்திரர் குருநாதரின் பூர்வாசிரம தமையனின் கொள்ளுப்பேரரரான இவரது பிருந்தாவனம் இங்கிருப்பதற்கான ஒரு      காரணம் என்ன என்று அறிந்து கொள்ளலாமா?  தமது பிருந்தாவன காலம் வந்த போது திவான் வெங்கண்ணாவை அழைத்து ராயரு    தம் ஜீவபிருந்தாவனத்திற்காக மாதவரம் என்னும் கிராமத்தில் இருந்து  கல் கொண்டு வர அடையாளம் சொல்லி அனுப்பினார். வெங்கண்ணாவும் பக்தி சிரத்தையுடன் அங்கு சென்று கல்லை கொண்டு வந்து பிருந்தாவனம் அமைத்து குருதேவரிடம் காட்டிய போது அவர் நான் சொன்ன ஸ்ரீராமர் அமர்ந்த கல் இதுவல்ல இந்த பிருந்தாவனம் இப்படியே இருக்கட்டும்   இதில் யார் பிருந்தாவனஸ்தர் ஆவார் என்று எதிர்காலத்தில் தெரியும்.   மீண்டும் மாதவரம் சென்று சரியான கல்லை கொண்டு வரவும் என்று அனுப்பினார். இந்தத் தடவை வெங்கண்ணா சரியான கல்லைக் கொண்டு வந்து பிருந்தாவனத்தை அமைத்தார். மிகுந்த மன நிம்மதியுடன் அருமையான தரிசனம் தந்த குருதேவருக்கு  கோடி நன்றிகள் கூறி விட்டு  வெளியே வந்தோம். இது நடந்த போது வாதீந்த்ரருக்கு வயது இரண்டு.

குருநாதருக்கு எதிரே உள்ள  மந்திராலய ஹனுமன் இராமர் கிஷ்கிந்தா செல்லும் போது அமர்ந்த கல்லினால் செய்யப்பட்டது.  இராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு பிறகு எஞ்சிய கல்லில் இந்த விக்ரகம் அவரின் விருப்பபடி உருவாக்கி அவர் எதிரிலேயே பிரதிஷ்டை செய்யப்பெற்றது. இக்கல்லின் ஒரு சிறு பகுதி இன்னும் மாதவரம் கிராமத்தில் உள்ளது அதை இராமராக கருதி வழிபட்டு வருகின்றனர். சமயம் உள்ளவர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து விட்டு வரலாம். அன்றைய தினம்  சிவலிங்கத்திற்கு  வெள்ளி கவசம் சார்த்தப்பெற்றிருந்தது.  வெளியே வரும் போது தீர்த்தபிரசாதமும் மந்திர அக்ஷதையும் வழங்கினார்கள், அவற்றை சுவீகரித்துக் கொண்டு மீண்டும் சன்னதி வலம் வந்தோம்.
 

 மூலராமருக்கு பூஜை
பின்னே உள்ள மண்டபத்தில் மூலமூர்த்திகளுக்கு அபிஷேகமும் பூஜையும் நடந்து கொண்டிருந்தது. வேத மந்திரங்கள் முழங்க கிரமப்பிரகாரம் நடந்த கொண்டிருந்த பூஜையில் சிறிது நேரம் கலந்து கொண்டு பின்னர் பிரசாதம் வாங்கிகொண்டு வெளியே வந்தோம். இதற்குள்  ஹோட்டலில் இருந்த குழந்தைகள்,பெண்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர் அவர்களுடன் இன்னொரு முறை சிறப்பு வழியில்  சென்று இன்னொரு முறை மனமார வழிபட்டோம்.  பின்னர் வெளியே சன்னதிக்கு அலங்கார வளையுவுடன் நேரெதிரே அமைக்கப்பட்டுள்ள சாலையின் இருபக்கமும் அருமையான  சிற்பங்களையும் மலர் தோட்டத்தையும் கண்டு களித்துவிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு, கடைகளை பார்த்துவிட்டு திரும்பி வந்து அன்னதானத்திற்கு  நன்கொடை அளித்து விட்டு குருதேவரின் சிலை அமைந்துள்ள ரவுண்டாவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  அலுவலகத்தின் மேல்மாடிக்குச் சென்று விமான தரிசனம் செய்தோம். அலுவலகத்தில் தேவஸ்தான அறைகளை பெற்று ஹோட்டலை காலி செய்து விட்டு அங்கு சென்று சாமன்களை வைத்து விட்டு  பின்னர் திரும்பி பிருந்தாவனம் வந்து அவ்வளாகத்தில் உள்ள மற்ற பிருந்தாவனஙளில் எல்லாம் வணங்கி விட்டு ஆலமரத்தடியில்  நெய் விளக்கேற்றி  வழிபாடு செய்தோம். இன்னும் ஒரு முறை குரு இராகவேந்திரரை தரிசனம் செய்து விட்டு அன்னதானத்தில் சென்று உணவருந்தி விட்டு  பிச்சாலயா மற்றும் பஞ்சமுகி செல்வதற்காக கிளம்பினோம்.      
 
 மந்திராலய மூல பிருந்தாவனம்
 
இந்த மாஞ்சாலியில் குருநாதர் ஆங்கிலேய பிரபு சர் தாமஸ் மன்றோவுடன் நடத்திய ஒரு அற்புதத்தை காணலாமா?   கி.பி. 1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது.
 
 வாதீந்திரர் பிருந்தாவனம்
மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் தனது காலணியையும் , தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம், அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்

வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் மன்றோ. அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர், அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக்  கேட்டனர். அதற்கு மன்றோ, ”பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லைஎன்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும், அவரது கம்பீரக் குரல் பற்றியும், செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர், ”ஏன், நீங்கள் அவரைக் காணவில்லையா?” என்று கேட்டார், குழுவினரைப் பார்த்து.  தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள், மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர்தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.


ஒரு   நூற்றாண்டுக்கு முன் பிருந்தாவனஸ்தரான  காலமான மகான் தன் முன் நேரில் தோன்றி அதுவும் தனது மொழியான  ஆங்கிலத்தில்யே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர் தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும், ஆளுநருக்கும், அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப் போனார். விரைவிலேயே மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர, அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிச்சாலயா மற்றும் பஞ்சமுகி தரிசனம் அடுத்த பதிவில் காணலாம்.

Labels: , , , ,

Monday, December 26, 2011

ஹனுமத் ஜெயந்தி - 2011

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ ராமஜெயம் 

வழக்கம் போல் இந்த ஆண்டும் மாதங்களில் சிறந்த மார்கழிமாதம், அமாவாசையும் , மூல நட்சத்திரமும் கலந்த நன்னாளில் வாயுபுத்ரன் ஹனுமனின் ஜெயந்தியை முன்னிட்டு  இரு ஆலயங்களின் சொல்லின் செல்வனின் அலங்காரங்கள் தங்கள் பார்வைக்காக.

தாரக பிரம்மம் சீதா, லக்ஷ்மண சகித ராமபிரான்

எங்கெங்கு இரகுநாத கீர்த்தனமோ அங்கெல்லாம் கை குவித்து, மனம் உருகி,  ஆனந்த கண்ணீர் மல்க  நின்று கேட்கும் இராமதூதன் அனுமன். இராமர் அவதார காலம் முடிந்து வைகுண்டம் சென்ற போது அவருடன் செல்லாமல் பூலோகத்திலேயே தங்கிவிட்ட சிரஞ்சீவி அனுமன். எங்கெங்கு ரகுராம கீர்த்தனமோ அங்கெல்லாம்
கரம் குவித்து , மனம் உருகி,  நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி
கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீஆஞ்சநேயா உன்னைப் 
பணிகின்றோம்! பன்முறை உன்னைப் பணிகின்றோம்!!சென்னை மேற்கு மாம்பலம் 
சஞ்சிவி ஆஞ்சனேயர் சிறப்பு அலங்காரம்


சென்னை அசோக்நகர் கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் ஹனுமத் ஜெயந்தி அன்று 100008( ஒரு லட்சத்து எட்டு) வடை மாலை அலங்காரம் நடைபெறும். இந்த வருடமும்  வடைத்தேரில் பஞ்சமுக ஆஞ்சனேயரும், வீனை வாசிக்கும்  கோலத்தில் பக்த ஆஞ்சனேயரும், மாருதியும், யோக ஆஞ்சனேயரும், பால ஆஞ்சனேயரும் சேவை சாதித்தனர். உடன் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும்  சேவை சாதித்தாள் இக்காட்சிகளை கண்டு அனுமன் அருள் பெறுங்கள்.  

 வீணை வாசிக்கும் பக்த ஆஞ்சனேயர்


ராம துவாரே தும் ரக்வாரே
ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே


நீயே இராமராச்சியத்தின் வாயில் காவலன், உன் அனுமதியின்றி யாரும் அங்கு செல்ல முடியாது . இத்தனை பாக்கியம் பெற்ற அனுமனே உன்னை வணங்குகின்றேன்.


 மார்கழி மாத பாவை பாடிய ஆண்டாள்


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
ற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
.


மேலிருந்து ஆசிர்வதிக்கும் பால ஆஞ்சனேயர்

லாய ஸஜீவன் லக்ஷன ஜியாயே
ஸ்ரீரகுவீர ஹரஷி உர லாயே


சஞ்சிவி மலையைக் கொணார்ந்து  இலக்குவனுடைய  உயிரைக் காத்து, இராமனுக்கு மகிழ்ச்சி தந்து  இராமனால் தழுவப்பட்டவனே, அனுமனே  உன்னை வணங்குகின்றேன்.  வடை இரதத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயர்


அனுமன், கருடர், வராஹர், ஹயக்ரீவர், நரசிம்மர் என்ற ஐந்து முகங்களைக் கொண்டவராய் இங்கு அருள் புரிகின்றார் பஞ்சமுக ஆஞ்சனேயர். மேற்கு நோக்கிய அனுமன் முகமும், கிழக்கு நோக்கிய கருட முகமும், வடக்கு நோக்கிய நரசிம்ம முகமும், தெற்கு நோக்கிய வராஹ முகமும் விளங்க மேலே ஹயக்ரீவ முகத்துடனும், வலது திருக்கரங்களில் சஞ்சீவி மலை, மழு, வாள், அமிர்த கலசம் தாங்கி அபய முத்திரையுடனும், இடது திருக்கரங்களில் ஏடு, பாசம், சௌகந்தி மலர், கேடயம். கதை தாங்கி மணியுடன் கூடிய வால் முன்னே தோன்ற நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார் மிகுந்த வரப் பிரசாதியான பஞ்ச முக ஆஞ்சனேயர்.


ஒவ்வொரு முகத்தால் நமக்கு பல வித நன்மைகள் விளைவிக்கின்றார் இவர். அவையாவன,
அனுமன் முகம் : சகல காரிய ஸ்த்தியளித்து, சனித் தொல்லையை நீக்கி, சகல தோஷங்களையும் போக்கி, எதிரிகளை அடக்கி காக்கின்றார்.
நரசிம்மர் முகம் : பில்லி சூனியம் பேய் பயக் கோளாறுகளை நீக்கி , துஷ்ட தேவதைகளை அடக்குகிறார்.

கருடர் முகம்: சரும நோய்களையும், விஷ நோய்களையும் , பழ வினை சம்பந்தப்பட்ட வியாதிகளையும் போக்குகின்றார்.

வராஹ முகம்: தீராத கடன் தீர்த்து செல்வம் பெருகச் செய்கின்றார். ஜுர ரோகம், விஷ ஜுரம், தீர்க்க முடியாத ரோகத்தையும், சகல வினைகளையும் பாவங்களையும் போக்குகின்றார்.

ஹயக்ரீவ முகம் : சகல கலைகள், படிப்பு, வாய் பேசாதிருப்பவர்களுக்கு வாக்கு வன்மை பெற செய்து சகல கலா வல்லவனாக்குகின்றார்.

அஷ்ட சித்தி நவநிதி கே தாதா
அஸ் வர தீன் ஜானகி மாதா

அணிமா முதல் வசித்வம் ஈறான  அட்டமா சித்திகளையும்,  சங்கநிதி, பத்மநிதி முதலான நவநிதிகளையும் அருளும் ஆற்றலை அனுமனே உனக்கு ஜானகி மாதா தந்திருக்கின்றாள். பிராட்டியின் திருவாக்கால்   சிரஞ்சீவி பட்டம் பெற்ற அனுமனே உன்னை வணங்குகின்றேன் 
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம்
ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

கோசல நாட்டின் பிரபு ஆன  ஸ்ரீராமனின் முத்திரை  மோதிரத்தை  (கனையாழி) வாயில் அடக்கியபடியே ஆழ் கடலை அநாசயமாக தாண்டிய அசகாய சூரனே, உன்னுடைய அளவிலா ஆற்றல் கண்டு அனுமனே உன்னை வணங்குகின்றேன். 

நாசை ரோக் ஹரை ஸப் பீரா
ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

வல்லமை மிக்க உன் நாமத்தை செபித்தால் நோய் நொடிகள் நீங்கும், துன்பம் அகலும், தாயே அனையாய் உன்னை வணங்குகின்றேன். ஸ்ரீ யோக ஆஞ்சனேயர்பவன தனய ஸங்கட ஹரன்
மங்கள மூரதி ரூப |
ராமலக்ஷன் ஸீதா ஸஹித
ஹ்ருதய பஸஹு ஸூரபூப || 

சங்கடகங்களை நீக்குபவனும், மங்கள வடிவினனும்,  வாயு புத்திரனுமான  அனுமன் என் இதயத்தில் இராம, இலட்சுமண, சீதா சகிதனாக எழுந்தருளி  அருள் பாலிக்க பிரார்த்திக்கின்றேன். 

( துளசி தாசரின் ஹனுமான் சாலீஸாவின் சில ஸ்லோகங்கள் இப்பதிவில் இடம்பெற்றுள்ளன )

Labels: , , ,