Monday, January 27, 2014

திருப்புளியங்குடி காய்சினவேந்தர் கருடசேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -8


இத்தலத்தை நம்மாழ்வார் திருப்புளிங்குடி என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.  தற்போது திருப்புளியங்குடி என்று அழைக்கப்படுகின்றதுஇந்த திவ்ய தேசத்தைப் பற்றிய குறிப்புகள்  பிரம்மாண்ட புராணத்திலும்,  தாமிரபரணி தல புராணத்திலும் உள்ளனதண்பொருநை நதி பாய்வதால் அழகான குளங்களையும்வயல்வெளியும் சூழ்ந்த  தலம்.   திருநெல்வேலியிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும்  திருவரகுணமங்கையில் இருந்து கிழக்கில் சுமார்  1 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் 83 ஆவது.  நவ திருப்பதிகளில் இது 3 வது திருப்பதி. நவகிரகங்களில் இது புதன் தலம்

மூலவர் :காசின வேந்தன், காய்சினவேந்தன், பூமிபாலகர்,  ஆதிசேஷனில் பள்ளி கொண்ட கோலம், தாயார் இருவருடன்  கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.

தாயார் :மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார்(தனி சன்னதி இல்லை) உற்சவர் – புளியங்குடிவல்லி
விமானம்: வேதசார  விமானம்.
தீர்த்தம் : வருணநிருதி தீர்த்தம், தேவ புஷ்கரணி.
பிரத்யட்சம் : வருணன், நிருதி, தர்மராஜா.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்:நம்மாழ்வார் 12 பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். 
கிரகம்: புதன் ஸ்தலம்.பூமி பாலகர் : முன்பொரு சமயம்  பகவான் பெரிய பிராட்டியாருடன் கருடனில் ஆரோகணித்து உலகை சுற்றி வரும் போது தண்பொருநை நதிக்கரையில் படிப்படியான அழகான மணற்பரப்பைக் கண்டு அங்கேயே  இறங்கி மலர்மகளுடன் மகிழ்ந்து காலம் கழித்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட பூமிபிராட்டி பாதாள லோகம் சென்றாள். உடனே உலகமும் வறண்டு விட்டது. இதனால் சகல ஜீவராசிகளும் துன்பமடைந்தனர். இதைக்கண்ட தேவர்கள் பகவானிடம் முறையிட்டனர். பகவான் அவர்களை தேற்றி விடை கொடுத்தனுப்பினான். பின்பு பாதாள லோகம் சென்று பூமி தேவியை சமாதானம் செய்து இங்கு அழைத்து வந்தார். பின்னர் நாச்சியார்கள் இருவரும் இணக்கமாக இருந்தனர். இத்திருப்புளிங்குடியில் பெருமாள் கிடந்த கோலத்தில் மண்மகள், மலர்மகள் இருவருடனும் திருக்கோயில் கொண்டார்.  எனவே இவர் “காசின வேந்தர்” (பூமி பாலகர்) என்று அழைக்கப்படுகின்றார். காய்சின வேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய் என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தபடி “காய்சின வேந்தர்” என்றும் அழைக்கப்படுகின்றார். 


காய்சினப்பறவையூர்ந்துபொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல்
மாசினமாலிமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன் நின்ற
காய்சினவேந்தேகதிர்முடியானேகலிவயல் திருப்புளிங்குடியாய்!
காய்சினவாழிசங்குவாள்வில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!

மேருமலையின் மீது தங்கும் நீருண்ட மேகம் போலே,  கோபம் கொண்டு தாக்க வல்ல கருடப்பறவையின் மேல் ஆரோகணித்து வந்து மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களை அழிந்துபோகும்படி தாக்கி வதைத்தாய். ( இதனால் காய்சின வெந்தன் என்னும் பெயர் பெற்றாய்) காய்சின வேந்தே! ஒளி மிகுந்த திருமுடி உடையவனே! வளம் மிகுந்த வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! காய்கின்ற சினம் கொண்ட சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு காட்சி தரும் நீ என் துயரத்தை நீக்குபவன் அன்றோ! அருள் புரிவாயாக?   

பெருமாளை அரக்கர்களை அழிக்கும் காய்சின வேந்தராகவும், கருடனை அவருக்கு அதி உதவி புரியும் காய்சின பறவையாகவும், மற்றும் பெருமாளின் பஞ்சாயுதங்களையும் காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு என்றும், இவற்றால் நம் இடர் களைபவர் என்று உற்சவரின் திருநாமத்தையும் சேர்த்து ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார் காரிமாறப்பிரான்.


இந்திரன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது : ஒரு சமயம் இமயமலையிலுள்ள தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது பத்னி இந்திராணியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அருகே  அப்பொழுது ஒரு ரிஷி தன் பத்னியுடன் மான் உருவில் ரமித்துக்கொண்டிருந்தார். உண்மையறியாத இந்திரன்  வஜ்ராயுதத்தால் மாற்றுருவில் இருந்த ரிஷியை அடிக்க அவரும் அதனால் இறந்தார். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பின்னர் தேவர்கள் எல்லாரும் தங்கள் குரு வியாழ பகவானை வேண்ட அவர் ஆலோசனையின் படி இந்திரன் திருப்புளியங்குடி  வந்து ஒரு தடாகத்தில் நீராடி   பூமிபாலகரை வணங்க  ஆதவனைக் கண்ட பனி போல  அவன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தேவர்கள் அநுமதியின் பேரில் முனிவர்கள் பலர் அதில் நீராடினர். அவர்கள் அன்றுமுதல்  அந்தத் தடாகம் ’இந்திர தீர்த்தம்”  என்று வழங்கப்படும் என்று வரம் கொடுத்தனர்.


யக்ஞ சர்மா மேல் வீடு பெற்றது: தனது சாப விமோசனத்தினால் மனம் மகிழ்ந்த இந்திரன் திருமாலை நோக்கி ஒரு பெரிய யாகம் துவக்கினான். அதை ஒரு அரக்கன் இடர் செய்தான். அரக்கனால் துன்புற்ற இந்திரன்  பூமிபாலகரை நோக்கி பிரார்த்தனை செய்ய, அவரும் அங்கு தோன்றி தனது கதையால் அவனை அடிக்க அவனும் மரணமடைந்தான். ஆயினும் முற்பிறவில் யக்ஞ சர்மா என்ற அந்தணனாக இருந்த அவன் வேள்வி செய்வித்த வசிஷ்ட புத்திரர்களுக்கு பணத்தின் ஆசையால் தக்ஷிணை கொடுக்காமல் அவர்களின் சாபத்தினால் அரக்கனானான். சாப விமோசனம் பெருமாளின் கதையால் அடிபடும் போது  கிட்டும் என்றனர். எனவே திருப்புளிங்குடியில் அவனுக்கு சாபம் தீர்ந்தது, மேலுலகமும் கிட்டியது. இந்திரனும் வேள்வியை இனிதாக முடித்தான்.   கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய்
கடுவினைநஞ்சே! என்னுடையமுதே! கலிவயல் திருப்புளிங்குடியாய்!
வடிவினையில்லா மலர்மகள் மற்றை நிலமகள்பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்கநீயொருநாள் கூவுதல்வருதல் செய்யாயே.

பெருமானே! உன் பகைவரிடத்தே அடியார்களுக்காக ஆயுதம் எடுக்க வல்லவனே! தேவர்கள் துன்பம் தொலைவதற்காக  அசுரர்களைத் தாக்கி அழிப்பவனே! அவர்களுக்குக் கடுமையான  நஞ்சு போன்றவனே! எனக்கோ இனிய அமுதமாக இருப்பவனே!  வளமான வயல்கள் நிறைந்த திருப்புளிங்குடி தலத்திலே  நீ பள்ளி கொண்டு காட்சி தருகின்றாய். இணையற்ற வடிவழகு கொண்ட பெரிய பிராட்டியாரும், மற்றும் பூமி பிராட்டியாரும் உன் மெல்லிய திருவடிகளை வருடியபடி பிடிக்கிறார்கள். அவர்களைப் போலவே கொடிய வினையேனாகிய அடியேனும் உன் திருவடிகளைப் பிடிக்க விரும்புகிறேன். அதற்காக என்னை நீ ஒரு நாள் அழைத்துக் கூப்பிட்டுக் கொள்ள வேண்டும். என்னை அங்கே  அழைத்துக்கொள்ளாவிடிலும் எனக்காக நீ இங்கேயாவது வர வேண்டும்.
சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் இத்தலம் அமைந்துள்ளது. புஜங்க சயனத் திருக்கோலத்தில் இருக்கும் பெருமாளின்   திருமேனி 12 அடிதிருப்பாதத்தையும் தாயார்களையும்  வெளியே உள்ள சாளரம் வழியாகத் தரிசிக்கலாம்தமிழ்நாட்டு  திவ்யதேசங்களில் வேறெங்கும் இல்லாத அமைப்பு!.   இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 120 படி எண்ணெய் தேவைப்படுகிறது. இங்குள்ள இலக்குமி  தேவிபூமிப்பிராட்டிநாச்சியார்களின் திரு உருவங்கள் வேறெங்கும்   காணமுடியாத அளவிற்கு மிக மிகப் பெரியவை! பொதுவாகப் பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து செல்லும்    தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்இங்கு பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது அரிதான காட்சி!. இங்கு குழந்தை பேறுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் பொய்ப்பதில்லை.  இனி வரும் பதிவில் இரட்டைத் திருப்பதி திருதொலைவில்லி மங்கலம் அரவிந்த லோசனர்  கருட சேவையைக் காணலாம்.

Labels: , , ,

Tuesday, January 21, 2014

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கருட சேவை

Visit BlogAdda.com to discover Indian blogs
ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -6


இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ தொலைவிலும்ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ  தொலைவிலும் தாமிரபரணியாற்றின் வடகரையில் உள்ளது.

மூலவர் : வைகுந்த நாதன், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: கள்ளர் பிரான் (சோர நாதர்)
தாயார் : வைகுந்த வல்லி, கள்ளர்பிரான் நாச்சியார்( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம் : தாமிரபரணி,பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
தல விருட்சம்: பவள மல்லி  
பிரத்யட்சம் : பிரம்மா, இந்திரன் , பிருகு  சக்ரவர்த்தி
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார் 
கிரகம்: சூரியஸ்தலம்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும்நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளதுஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.      நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன்ஆதி சேஷனைக் குடையாகக்  மார்பில் 
மஹா லக்ஷ்மியுடன்  நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்பிரகாரத்தில்     வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளதுமேலும் நரசிம்மர் சன்னிதிகோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்பௌர்ணமி    நாளன்றுசூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படிஇதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம்மேரு வடிவ  பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான் பலன் உண்டு. கள்ளர்பிரான் கருடசேவை

இரண்டு திருவாசிகளும் மற்றும் கருடாழ்வாருக்கும் முழுதும் மலர் மாலை அலங்காரமும் இங்கு மட்டுமே சேவிக்க கிட்டியது. ஒவ்வொரு பெருமாளுக்கும் ஒரு சிறப்பு அலங்காரம்  காணக்கண் கோடி வேண்டும். 


தல வரலாறு: முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மஹாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி,  தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி ”பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில்   தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா” என்று அனுப்பினார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த  கெண்டியை ஓர் பெண்ணாக்கி “ பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா” என்று அனுப்பினார்.  அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி  சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.  பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.

பிரமனும் “அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்” எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் “செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய   வேண்டும்”  இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார். பிரமனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் “ கலச தீர்த்தம்” என்று வழங்கப்படுகின்றது. பிரமன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.


காய்சின பறவையில் கள்ளர்பிரான் 


வைகுந்தநாதன் சோரநாதன் ஆன வரலாறு: இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும்  ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும். அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து  துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.    

பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு  அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர். மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய  என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.

அது கேட்ட அரசனும் சிங்காதனத்திலிருந்து எழுந்து  நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள்  சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார். 

பால் திருமஞ்சனம்:
தென்னகத்தில் குறிப்பாக மதுரைதிருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளதுஇது இத்தலத்து பெருமாளின் பெயராகும்பூவுலகில் ஸ்ரீவைகுண்டபதி பிரமன் தவத்திற்கு மகிழ்ந்து அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளிய பிறகு அந்த சிறிய சன்னதியும்  மூர்த்தியும் பூமியில் புதையுண்டன.  பின்னர் பாண்டிய மன்னர் காலத்தில்,  இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசுதொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்ததுஇதையறிந்து வந்த பாண்டிய மன்னன்அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு  வெகு ஆனந்தம் கொண்டு ஆச்சரியமான பெரிய கோயில் எழுப்பினான்அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான்இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்செய்யப்படுகிறதுபாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் "பால்பாண்டிஎன்ற பெயர் ஏற்பட்டது.

நம்மாழ்வார் பெருமாளை இரு பாடல்களால் வைப்புத்தலமாக  மங்களாசாசனம் செய்துள்ளார். அவையாவன

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே

ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்நம்மாழ்வார் தனது பாசசுரத்தில் "புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர்  சமையல் முடியும்வரையில் படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும்போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாம்தமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருளவந்த பெருமாள், அவர் பக்தியில் உயர்நிலை அதையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (பள்ளி கொண்ட கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இந்த ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் சேவை சாதிக்கின்றார்" என்று வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் இந்த பாசுரத்திற்கு  வியாக்கியானம் செய்துள்ளார்.     

எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை – அடி தொழுது எழுந்து இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலை தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்திருவைகுந்துள்ளாய்தேவா!
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய்வீற்று இடம் கொண்டே.(3575)

எங்கள் முன்னால் கண்ணுக்குத் தெரியும்படி உலகத்தவர் அனைவரும் உன் இணையார் திருவடிகளைத் தொழுதபடியும் பின் எழுந்தபடியும் வணங்கி உன்னைத் துதிக்கிறார்கள்அவர்கள் மிகுந்த பக்தியுடன் தத்தம் வார்த்தைகளால் உன்னைப் போற்றி வழிபடுகிறார்கள்இப்படிப்பட்ட மேன்மையுடைய நீசந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள மாடங்கள் நிறைந்த திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டுள்ளாய்நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். நீயே ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாய். தேவனே!  அகன்ற இந்த உலகத்தில், பரமபதத்தைப் போலவே இத்திருப்புளிங்குடியிலும் ஒரு நாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் எங்களுக்குக் காட்சி தர வேண்டும். 

மதுரகவியாழ்வார் 

நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.  108 திவ்ய தேச சேவை: 
தை மாதம் முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி கொடி மரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து ஒவ்வொரு போர்வையாக களைகின்றனர். அன்றைய தினம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108  திவ்யதேசத்து எம்பெருமான்களாக கள்ளபிரான் சேவை சாதிப்பதாக ஐதீகம்.ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்கள்: பாண்டி நாட்டு திருக்கோயில்களின் சிறப்ப்பம்சமே உலகமே வியந்து போற்றும் சிற்பங்கள் ஆகும். இந்த ஸ்ரீவைகுண்டம் கோவிலும் அதற்கு விதிவிலக்கல்ல. 9 நிலைகளும் 110  அடி உயரமும் கொண்டுள்ள இராஜ கோபுரத்தில் அற்புதமான பல சுதை சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலின் திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்தை சார்ந்த அற்புதமான கற்சிற்பங்கள் உள்ளன. அவை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.  குறிப்பாக ஆதிசேஷனை குடையாகக் கொண்டு அமர்ந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் காட்சி தரும் வைகுண்ட பெருமாள் சிற்பம், மூன்று உலகங்களும் தன்னுள் அடக்கம் என்று உணர்த்தும்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த பெருமாள் சிற்பம், அன்பிற்கும்  உண்டோ அடைக்கும் தாழ்  என்பதை உணர்த்தும் இராமர், அனுமன் சிற்பம்,
 கணவனின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர், பலவித கோலங்களில் வானரங்கள் என ஆயிரம் கதை சொல்லும் சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபம்.  இனி வரும் பதிவில் திருப்புளிங்குடி காய்சின வேந்தரின் கருடசேவையைக் காணலாம் அன்பர்களே. 

Labels: , , ,