நவ பிருந்தாவனம் பஜே! நவ பிருந்தாவனம் பஜே!
நவபிருந்தாவனத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
இனி நவபிருந்தாவத்தை தரிசனம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் காணலாமா?
1. நவ பிருந்தாவனம் தீவு பகுதிக்குள் உணவு, தின்பண்டப் பொருள்களை கொண்டு சென்று உண்ணக் கூடாது.
2. இந்த தீவைச்சுற்றியுள்ள நீரில் வாய் கொப்பளிப்பது, முகம் கழுவுவது கூடாது.
3 எக்காரணம் கொண்டும் குளிக்காமல் நவபிருந்தாவனம் வளாகத்திற்குள் நுழையக்கூடாது.
4. லுங்கி, பேண்ட அணிந்து கொண்டு உள்ளே செல்வது கூடாது. வேஷ்டி, துண்டு அணிந்து செல்வது சிறந்தது.
5. பெண்கள், குளித்தபின், தலையை விரித்த நிலையில் உள்ளே செல்லக் கூடாது.
6. நவபிருந்தாவனத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோட்டைத் தாண்டி உள்ளே செல்லக் கூடாது.
7. நவபிருந்தாவனங்களை எந்தக் காரணம் கொண்டும் தொட்டு வணங்கக் கூடாது.
8. 11 விளக்குகளை அரங்கநாதர் சன்னதியில் ஏற்றி வழிபட்டு 11 முறை நவபிருந்தாவனங்களை வலம் வரலாம்.
9. அங்கப்ரதக்ஷணம் செய்யக்கூடாது.
10. உப்பு, மிளகு முதலியவற்றை பிருந்தாவனங்களின் முன்பு சமர்பிக்கக்கூடாது. கற்பூரமும் ஏற்றக்கூடாது.
ஏனென்றால் இம்மகான்கள் எல்லாம் பரம வைராக்கிய புருஷர்கள், ஆச்சார அனுஷ்டானங்களில் கண்டிப்பானவர்கள், எனவே அங்குள்ள தெய்வீக நிலை பாதிக்கப்படாமல் அமைதியுடன் வழிபட்டு வருவது பக்தர்களாகிய நமது கடமையாகும் என்று திரு. ஏ.ஏம். இராஜகோபால் அவர்கள் பக்தர்களின் நன்மையை உத்தேசித்து இவ்விதிமுறைகளை தொகுத்துள்ளார். நாம் நவபிருந்தாவனம் செல்வது நமது துன்பங்களை தொலைத்து நன்மை பெற செய்யக் கூடாத செயல்களை செய்து மேலும் பாவங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்ளகூதாது என்பதற்காகவே இந்த விதிமுறைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். எந்த விதத்ததிலும் ஆழ்ந்த தியானத்தில் உள்ள மகான்களின் தியானத்திற்கு எந்த விதமான பங்கமும் வராதவாறு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

நான்கு தூண்களுடன் வியாஸராஜர் பிருந்தாவனம்
இனி நவபிருந்தாவனங்களின் அமைப்பைப் பார்ப்போமா, அவதாரத்ரய அனுமனின் ஆலயத்திற்கு நேர் எதிரே நடுநாயகமாக ஸ்ரீ வியாஸராஜரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த இடத்தில்தான் ஸ்ரீபிரஹலாதன் தவம் செய்திருக்கின்றார். இவருக்கு வலப்புறம் இவரது சீடர்கள் மற்றும் இவருக்குப்பின் பிருந்தாவனஸ்தரானவர்கள் பிருந்தாவனங்கள் உள்ளன. இவருக்கு இடப்புறம் இவருக்கு முன் பிருந்தாவனஸ்தர் ஆனவர்களின் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. இந்த பிருந்தாவனங்களில் வியாஸராஜரின் பிருந்தாவனத்தின் முன் நான்கு தூண்கள் உள்ளன. அவரது பிருந்தாவனத்தின் நான்கு பக்கங்களிலும், சீதாராமர், லக்ஷ்மணன், அனுமன் வியாஸராஜர் சிற்பங்கள் உள்ளன. பீடத்தில் யாணை சிற்பங்கள் உள்ளன.

இரண்டாவது பிருந்தாவனத்தில் ஒரு போர் வீரனும் சந்நியாசியும் சிற்பமாக உள்ளனர். ஸ்ரீஜய தீர்த்தர் தோண்டுபந்த் என்று வீரனாகவும், சந்நியாசியாகவும் உள்ளதை இது குறிக்கின்றது என்பார் ஒரு சாரார். இல்லை ஸ்ரீரகுவீர்யரை ஒரு சமயம் ஒரு மிலேச்சன் துரத்தி வந்ததை இது குறிக்கின்றது என்பது இன்னொரு சாரார் வாதம். ஒன்பதாவது பிருந்தாவனமான கோவிந்த ஒடையரின் பிருந்தாவனம் பத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு பக்கத்தில் உருவில் மிக சிறிய பிருந்தாவனமாக விளங்குகின்றது. இவரது பிருந்தாவனத்தில் சன்னியாசி, அனுமன், வீரன் சிற்பங்கள் உள்ளன. நவ பிருந்தாவனத்திற்கு செல்லும் அன்பர்கள் பூஜைக்கு வேண்டிய விளக்கு நெய், திரி முதலியவற்றை தாங்களே எடுத்து செல்லவேண்டும் அங்கு கிடைக்காது.
எல்லோரும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்திவிட்டு வரும் வரை அங்கே அமர்ந்து மகான்களில் அருள் மழையில் நனைந்து மிகவும் நிறைவான மனதுடன் இன்னும் பலமுறை தங்கள் அனைவரையும் சேவிக்கும் பாக்கியம் அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டே வெளியில் வந்து படகில் ஏறி துங்கபத்ரையை கடந்து ஆனேகுந்தி வந்து சேர்ந்தோம்.

நவ பிருந்தாவன மகான்களை தரிசித்து விட்டு
திருப்தியுடன் திரும்புகின்றோம்

துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மண்டபம்

துங்கபத்ரையில் ஒரு கடற்காக்கை
ஆனேகுந்தி திரும்பி வந்து விட்டோம்
ஆனேகுந்தி திரும்பி வந்த போது வைக்கோற்போராக மாறியிருந்த மண்டபம் நாராயண மண்டபம் என்று அறிந்தோம். HOOVA CAFÉ சென்றோம். மதிய உணவு தயாராக இருந்தது. உணவு வீட்டுச் சாப்பாடுதான், இனிப்பு, பாயசம், அப்பளம் ஊறுகாய் என்று தேவாமிர்தமாக இருந்தது. அப்போது தமிழில் பேசி ஒரு இளைஞர் எல்லா உதவிகளும் செய்தார் அவர் யார் என்று கேட்ட போது தான் ஒரு வழிகாட்டி என்றும் பெயர் மஞ்சுநாத் என்றும் அவரது செல் போன் எண் 09449284490, 09480567616 என்றும் முன்கூட்டியே போன் செய்தால் வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருவேன் என்று கூறினார்.

ஆனேகுந்தி HOOVA CAFEல் மதிய உணவு
தானத்தில் எல்லாம் சிறந்தது அன்னதானம் அல்லவா? அதனால்தான் ஔவையாரும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறுகிறார். மதிய உணவிற்கு பிறகு திரு.தனுஷ்கோடி அவர்கள் மடத்திற்கு அன்னதானத்திற்காக அனைவரின் சார்பாக நன்கொடை வழங்கலாம் என்று கூறினார், எனவே இராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவன மடத்திற்கு சென்றோம், வெளியே கதவு சார்த்தியிருந்தது ஜன்னல் வழியாக உள்ளே இருந்தவர்களிடம் பேசினோம் எங்கள் எண்ணத்தை அறிந்த அவர்கள் கதவை திறந்து அனைவரையும் உள்ளே அனுமதித்தனர். நன்கொடையை பெற்றுக்கொண்டு இரசீது கொடுத்து, ஹரிவாயு குருவிற்கு ஆரத்தி காட்டி தரிசனம் செய்து வைத்து நிறைய பிரசாதமும், அங்கவஸ்திர மரியாதையும் கொடுத்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தினர்.

ஆனேகுந்தி இராகவேந்திரர் பிருந்தாவனம்
தாங்கள் மேலே படித்த விதிமுறைகள் எல்லாம் இங்கு அனைவரும் காணும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளன. இந்த மிருத்திகா பிருந்தாவனம் மந்தராலய மடாதீசர் ஸ்ரீஸ்ரீ ஸுஷமீந்த்ர தீர்த்தரால் 2001 ஆண்டு பிரதிஷ்டைசெய்யப்பட்டதாம். சாயுங்காலமே ஆனேகுந்தி செல்பவர்கள் இங்கு இரவு தங்கிக்கொள்ளலாம், உணவு ஏற்பாடுகளும் முன் கூட்டியே சொன்னால் செய்து தருகிறார்கள் நம்முடைய பொருட்களையும் இங்கே வைத்து விட்டு செல்ல வசதிகள் உள்ளன. காலையில் பட்டர் நவபிருந்தாவனம் செல்லும் போது அவருடன் கூடவே சென்று அபிஷேகம் பார்க்கலாம். இராகவேந்திர மடத்தின் மேலாளர் M.S.Ramesh Jodiar, 09480305874, மடத்தின் தொலைப்பேசி எண்: 08533-267733. இவ்வாறு ஆனேகுந்தியில் ஹரிவாயு குருவின் தரிசனம் பெற்றபின் சிந்தாமணிக்கு வண்டி மூலம் புறப்பட்டு சென்றோம்.

பூவில் உள்ள எறும்பைப் பாருங்கள்
பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க்கு குங் கல்லிடைப்
பட்டதேரைக்கும் அன்றுற் பவித்திடு கருப்
பைதுறு சீவனுக்கும்
மல்குஞ் சாரசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவர்க்கு மியாவருக்கும் அவரவர்
மனச்சலிப்பிலாமலே
படியளக்கும் அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பன் திருவடிகளே சரணம்.
Labels: அவதாரத்ரய ஹனுமன், நவபிருந்தாவனம், வியாஸராஜ தீர்த்தர்