Saturday, July 26, 2008

ஆனி கருடன்

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீநிவாசப்பெருமாள்


என்னங்க தலைப்புக்குப் பதிலா ஒரு சமன்பாட்டை போட்டு வைத்திருக்கின்றேன் என்று பார்க்கிறீர்களா? விடை என்ன என்று சரி பார்க்க பதிவின் இறுதிக்கு வரவும், அவசரமில்லை, மெதுவாக பெருமாளின் அழகையும் ஆழ்வாரின் அழகையும் கண்டு இரசித்து விட்டே வரவும்.வாழ்த்தின் பயன் வாழ்த்து பெறுபவர்க்கு மட்டுமல்லாமல் வாழ்த்துபவர்களுக்கும் பயன்படுகின்றது. நம்மை விட பெரியவர்களை நாம் வாழ்த்தும் போது அவர்கள் மனமகிழ்ந்து நமக்கு வேண்டிய நன்மைகளை செய்கின்றனர். இவ்வாறே நாம் இறைவனை வாழ்த்தினால் அந்த கருணாமூர்த்தி நமது கவலைகளை போக்கி நமக்கு எல்லா நன்மைகளையும் அருளுவார் அல்லவா. இவ்வாறு அந்த ஆதி மூலனுக்கே பல்லாண்டு பாடியவர்தான் பெரியாழ்வார்.


ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபத்ர சாயிக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தவர் பெரியாழ்வார். இவரே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள், ஆண்டாள் நாச்சியாரை வளர்க்கும் பேறு பெற்றார். அக்காலத்தில் மதுரையை ஆண்டு வந்த வல்லப தேவன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சடசு நடதினான். அதில் அவன் " யார் முழு முதற் கடவுள்" ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்தான். அதற்கு பரிசாக தங்க நாணயங்கள் அடங்கிய பொற்கிழி ஒன்றை தனது தவத்திறமையினால் எந்த வித பிடிப்புமில்லாமல் ஆகாயத்தில் தொங்க விட்டான். தனது கேள்விக்கு யார் சரியான விடை அளிக்கின்றார்களோ அவரது காலடியில் இந்த பொற்கிழி தானாக விழும் என்றும் அறிவித்திருந்தான். இந்த சடசிலே அனைத்து சமயத்தினரும் கலந்து கொண்டார்கள் தங்கள் தெய்வமே சிறந்தவர் என்று வாதிட்டனர். அதிலே பெரியாழ்வாரும் கலந்து கொண்டு, வேதப்பகுதியை எடுத்துக்காட்டியே விஷ்ணு சித்தர் கூடல் மாநகரில் பலசமய சான்றோர்கள் கூடிய அந்த சபையில் தனது வாதத் திறமையால் அனைவரையும் தோற்க்கடித்து "விஷ்ணுவே முழுமுதற் கடவுள், வைணவ சமயமே மிகச்சிறந்த சமயம்" என்பதை நிருபித்தார். மன்னன் அறிவித்த பொற்கிழியையும் தானாக அவரது காலில் விழுந்தது .யானை மேல் பெரியாழ்வார்வெற்றி பெற்ற பெரியாழ்வாரை மன்னன் தனது பட்டத்து யாணை மேலே ஏற்றி நகர் வலம் வரச்செய்தான் வல்லப தேவன். அவ்வாறு பொற்கிழியுடன் அவர் வலம் வரும் போது, தன் அன்பன் வலம் வரும் அழகை காண்பதற்காக வானில் கூடலழகர், வானோர் தனித்தலைவர், அயர்வரும் அம்ரர்கள் அதிபதி, மூவேழுகுக்கும் நாதன், ஆராவாமுதமான திருமால், ஸ்ரீ தேவியுடன் கருடாரூடராக வருகின்றார். பெருமாளைக் கண்டவுடன் , "எங்கே பெருமாளின் திருவுருவத்திற்க்கும் பெருமைகளுக்கும் கண்ணேறு பட்டுவிடுமோ" என்று அஞ்சி அவரை வாழ்த்தி பரபரப்புடன் யானை மேலிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டை பாடுகின்றார், தன்னை யசோதையாகவும், பெருமாளை கண்ணனாகவும் பாவித்து பாசுரங்கள் பாடிய விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார்.
பையுடை நாகப்படை கொடியான்பெரிய திருவடியில்


பெரியழ்வார் வைபவம் முழுதும் படிக்க கிளிக்குக இங்கே.
இனி தலைப்பு புதிருக்கான விடை:


(ஆனி + சுவாதி + கருடன் = ? ? ? )


நீங்கள் இப்பதிவில் படித்த பெரியாழ்வார்தான்

இவர் கலி பிறந்த 47-வதான க்ரோதன வருடம் ஆனி மாதம், சுகல பக்ஷம், ஏகாதசி, ஞாயிற்றுக்கிழமை கூடிய சுவாதி நட்சத்திரத்தில், , வேயர் குலத்தில் புதுமையாருக்கும், முகுந்தாச்சார்யாருக்கும் புத்திரராக, கருடனின் அமசமாக அவதாரம் செய்தார்.இவரது அவதார நட்சத்திரமான ஆனி சுவாதியன்று ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் திருமயிலையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவின் சில படங்களைஇப்பதிவில் கண்டீர்கள்.பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுபல கோடி நூறாயிரம்மல்லாண்ட திண்டோள் மணி வண்ணா! உன்செவ்வடி செவ்விதிருக்காப்பு.அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டுவடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டுவடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டுபடைப்போர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

என்று பெருமாளுக்கும், பெரிய பிராட்டிக்கும், சங்கு, சக்கரங்களுக்கும் பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.கருட சேவை தொடரும்..........

Sunday, July 20, 2008

கருடாழ்வார்

Visit BlogAdda.com to discover Indian blogs
அஹோபிலம் பாவன நரசிம்மர் சன்னதி கருடாழ்வார்

ஆழ்வார்கள் எம்பெருமானின் திருவருளினால் மயர்வற மதிநலம் பெற்று திருமாலாகிய அவரின் பேர் எழிற் பொய்கையுள் ஆழ மூழ்கிக் கவி பாடியவர்கள். ஆழ்வார்கள் திவ்ய சூரிகள். ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில் தென் கலை மரபை தோற்றுவித்தன என்றால் மிகையாகாது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களான திவ்ய பிரபந்தங்கள் உபய வேதாதங்கள் ஆகும். இவ்வாறு எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து பாசுரங்கள் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆயினும் ஆழ்வார் என்று அழைக்கப்படுபவர்கள் இன்னும் சிலரும் உண்டு. இவர்கள் கருடாழ்வார், இளையாழ்வான், பிரகலாதாழ்வான், கஜேந்திராழ்வான் ஆகியோர் ஆவர். இப்பதிவில் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் பெரிய திருவடியாம் கருடன் எவ்வாறு கருடாழ்வார் என்னும் சிறப்புப் பெற்றார் என்பதை காண்போம்.


அதற்காக நாம் அஹோபிலம் செல்ல வேண்டும், செல்வோமா? கிருத யுகத்தில் இந்த அஹோபிலம்தான் ஹிரண்ய கசிபுவின் அரண்மனை, தன் தமையனாகிய ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விஷ்ணு பகவான் பூமிப்பிராட்டியாரை மீட்டதால் கோபம் கொண்ட ஹிரண்ய கசிபு அவர் மேல் கடும்கோபம் கொண்டிருந்தான், மேலும் அரிய வரங்கள் பெற்று தானே கடவுள் என்றும் யாரும் விஷ்ணுவை வணங்கக்கூடாது என்று கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்தான். ஆனால் இறைவனின் திருவுள்ளப்படி அவன்து மகனாக பரம ப்க்தனாக , தாயின் கர்பத்தில் இருக்கும் போதே நாரத மஹரிஷியின் மூலம் "ஓம் நமோ நாராயணாய" என்னும் மந்திர உபதேசம் பெற்றவனாக பிறந்தான் பிரகலாதன். அவன் வளர வளர அவன்து விஷ்ணு பக்தியும் வளர்ந்தது. அவனைக் கண்டு ஹிரண்யகஷிபுவின் கோபமும் வளர்ந்தது. மகன் என்று கூடப் பாராமல் பல் வேறு வழிகளில் அவனைக் கொல்லப் பார்த்தான் ஆனால் ஒவ்வொரு முறையும் நாராயணன் தன் பக்தனைக் காப்பாறினார். இறுதியாக ஒரு நாள் கோபம் தலைக்கேறி "எங்கிருக்கிறான் உன் நாராயணன்" என்று ஆணவத்துடன் கேட்டான் ஹிரண்ய கசிபு . ஆக்ரோஷத்துடனும், ஆணவத்துடனும் தன் எதிரே பயமுறுத்தும் விதத்தில் நின்று மிரட்டிய தன் தந்தையானவனை கண்டு சிறிதும் கலங்காமல் திட பிரக்ஞனாய் அந்த சர்வேஸ்வரன் மேல் கொண்ட பக்தியால் அவர் எப்படியும் தன்னை காப்பார் என்ற நம்பிக்கையுடன் பிரகலாதன் அமைதியாக அவர் "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று பதிலிறுத்தான். மூர்க்கமாக தன் கதாயுதத்தால் ஒரு தூணை தாக்கினான் ஹிரண்யன். "அண்டமெல்லாம நடுக்கும் படி அந்த தூண் பிளந்தது அதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் வஜ்ர நகங்களும் கொண்டு சிங்கப்பெருமான் ஆவிர்பவித்தார்" அதே க்ஷணத்தில் பெருமாள் தன் அன்பன் சொன்ன சொல்லை மெய்பிக்க, இந்த அற்புதத்தை பெரியாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்


அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே


வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்


உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்


பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி .


ஜ்வாலா நரசிம்மர்ஹிரண்யன் பெற்ற வ்ரத்தின் படி, மனிதனாகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ, தேவராகவோ இல்லாத பெருமாள், உள்ளேயோ வெளியேயோ இல்லாமல் வாசற்படியில் அம்ர்ந்து ஆகாயத்திலோ, பூமியிலோ இல்லாமல் தன்து மடியில் ஹிரண்யனை போட்டுக் கொண்டு பகலோ இரவோ அல்லாத சந்தியா காலத்தில் ஆயுதமே அல்லாத தனது கூரிய நகங்களால் அவனது மார்பைக் கிழித்து அவன்து குடலை மாலையாகப் போட்டு ஜ்வாலா நரசிம்மராக அவனை வதம் செய்தார் ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தின் மகிமையையும் பிரகலாதாழ்வானின் பக்தியின் பெருமையையும் நிலை நாட்டினார் பெருமாள். பெருமாளின் சீற்றம் கண்டு சகல தேவர்களும் நடுங்கி நிற்க பிரகலாதன் மட்டும் தனக்காக அவதாரம் எடுத்த பெருமாளை பக்தியுடன் நோக்கி அவரை சாந்தமதையும்படி வேண்டி பெருமாளை சாந்தப்படுத்தினான். இவ்வாறு பெருமாளின் பக்தியிலே ஆழ்ந்ததால்தான் பிரகலாதன் பிரகலாதாழ்வான் என்று போற்றப்படுகின்றான்.

என்னடா கருடாழ்வானைப்பற்றிக் கூறுகின்றேன் என்று ஆரம்பித்து பிரகலாதாழ்வானைப் பற்றி கூறிக்கொண்டிருக்கிறேனே என்று யோசிக்கிறீர்களா? சற்று பொறுங்கள் இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் புரியும்.


பிரகலாதாழ்வான் சொன்ன வார்த்தையை மெய்பிக்க பெருமாள் அதே நொடியில் ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வந்தார். அதனால் மிகவும் துக்கம் கொண்ட கருடன், பெருமாளிடம் தனக்கு நரசிம்ம அவதார சேவையை காட்டி அருளுமாறு வேண்டினான். கருடனின் பெருமையை உலகத்தோர்க்கு அறிய செய்ய திருவுளம் கொணட பெருமாள் நீ அஹோபிலம் சென்று தவம் செய் தக்க சமயத்தில் நான் வந்து சேவை சாதிக்கின்றேன் என்று அருளினார்.


பெருமாள் கூடாவிரணியனைக் கூருகிரால மார்பிட அவ்தாரம் செய்த புண்ணிய பூமியாகிய அஹோபிலத்தில் வந்து கருடன் பெருமாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ய ஆரம்பித்தான். அவ்வளவு கடுமையாக தவம் செய்தான் கருடன், அவனுடைய தவத்தீயால் பூலோகம் ஸ்தம்பித்தது, தேவலோகத்தையும் அது விடவில்லை . தேவேந்திரனுக்கு பயம் பிடித்துக் கொண்டு விட்டது, ஒரு காலத்தில் தேவ லோகம் வந்து தேவர்கள் அனைவரையும் தோற்கடித்து அமிர்தத்தை எடுத்து சென்றவனல்லாவா கருடன்? எனவே எப்படியாவது அவனது தவத்தை கலைத்து தன்து இந்திர பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறியாமையால் அப்ரஸ்களை அனுப்பி கருடனின் தவத்தை கலைக்க முயற்சி செய்தான். அப்ஸரஸ்கள் வந்து ஆடியும் பாடியும் தவத்தை கலைக்க முயன்றனர். ஆனால் கருடன் கோபம் கொள்ளவில்லை, சாந்தமாக உங்கள் தேவேந்திரனிடம் சென்று சொல்லுங்கள், நான் இந்திரப்பதவிக்காக தவ்ம் செய்யவில்லை அது வேண்டியிருந்தால் அமிர்தம் கொண்டு சென்ற அன்றே அப்பதவியை பிடித்துக் கொண்டிருப்பேன் அன்று தாயின் துயர் துடைக்க வந்தேன். இன்று பெருமாளின் திவ்ய மங்கள தரிசனம் காணவே தவம் செய்கின்றேன். அவருக்கு செய்யும் சேவையை விட பெரிய பதவி ஏதும் இல்லை என்று அவர்களை திருப்பி இந்திரனிடமே திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் பெருமாளை ந்ருஸிம்ஹராய் தரிசிக்க வேண்டி ஒரே மனதுடன்


ஆடியாடி அகம்கரைந்து இசைபாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்நாடிநாடி நரசிங்கா!என்று ஊனும் உள்ளமும் உருக கடும் தவத்தை தொடர்ந்தான் வைனதேயன்.

கருடனின் திட பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் சத்திய சொரூபனாய் மலைக்குகையில் நெருப்பின் உக்ரத்தோது அவன் விரும்பியப்டியே உக்ர நரசிம்மராய் அன்று எவ்வாறு இருந்தாரோ அது போலவே சேவை சாத்தித்தார். பிரகலாதன் கை கூப்பி நிற்க ஹிரணியணை மடியில் போட்டுக் கொண்டு உக்ரமாய் அவனது மார்பைப் பிளக்கும் கோலத்தில் முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் என்ற படி பெருமாள் கருடாழ்வாருக்கு சேவை சாதித்தார். மாறாத பக்தி கொண்டு பகவான் சேவையே பிரதானம் என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றப்படுகின்றார்.
தனக்கு சேவை சாதித்த பெருமாளிடம் ஒரு வரம் கேட்கின்றான் கருடன், நான் இந்த பவிதரமான ஷேத்திரத்தில் மலையாக தங்களை சேவித்த வண்ணம் நிற்க வேண்டும், தாங்கள் இம்மலையில் ஒரு குகையில் அன்பர்களுக்கு இதே கோலத்தில் சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வாறே அருளினார். இன்றும் கருடாத்ரியில் ஒரு குகையில் பெருமாள் அஹோபில நவ நரசிம்மர்களுள் முக்கியமானவராக அஹோபில நரசிம்மராக், உக்ர நரசிம்மராக இன்றும் சேவை சாதிக்கின்றார். குகையில் பெருமாளுக்கு எதிரே கருடன் தவ நிலையில் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு பெருமாள் அவதாரம் செய்த தலத்தில் நாம் எல்லோரும் உய்ய பெருமாள் கோவில் கொள்ள காரணமாக இருந்தார் கருடன்.
இந்த சிங்கவேள் குன்றத்தின் சிறப்பை திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.


அங்கண்ஞாலம்அஞ்ச அங்குஓராளரியாய் அவுணன்


பொங்காஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்


பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச்


செங்கணாளிஇட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

அலகு இரு இறக்கைகள் என மூன்று சிகரங்களாக காட்சி அளிக்கும் கருடாத்ரி


பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அல்குடனும் மூன்று பகுதிகளாகவும் அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம். அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது. கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும் தாயார் செஞ்சு லக்ஷ்மித்தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார். இவ்வளவு பெருமைகள் பெற்ற அஹோபிலம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.


கருடாழ்வரின் கூப்பிய கரங்கள்


இனி அஹோபில ஷேத்திரத்தின் சிறப்புகள் சிலஅஹோபிலே கருடசைல மத்யே

க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம்

லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே

என்றபடி அஹோபில ஷேத்திரத்தில் கருட மலையின் கர்பத்தில் கருணையின் காரணமாக கோவில் கொண்டு இடது பக்கத்தில் பெரிய பிராட்டியாரை அனைத்த வண்ணம் சேவை சாதிக்கும் லக்ஷ்மி ந்ருஸிம்ஹரை சரணம் அடைகின்றேன்.அஹோபிலம் நவநரசிம்மர்கள்


இவ்வாறு எப்போதும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல மங்கை மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்தே இருக்கும் மாலோலனாகவும் மற்றும் எட்டு கோலங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தான் அஹோபிலம். திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ஒரு பாடலில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்" என்று சிங்கவேள் குன்றம் என்று பாடிய தலம். காசியில் ஆயிரம் யுகங்கள், ப்ரயாகையில் இருபது யுகங்கள், கயையில் நூறு யுகங்கள் வாழும் பயனை அஹோபில ஷேத்திரத்தில் ஒரு நாள் வாசம் செய்தால் கிட்டும் எனது அஹோபிலத்தின் சிறப்பு. இராமாவாதாரத்தில் இராமருக்கு இளையவராக பிறந்து அவர் சேவை ஒன்றையே எப்போதும் சிந்தித்து இராமரை இணை பிரியாது எப்போதும் தொண்டு செய்து பின் கிருஷ்ணாவதாரத்திலே அவருக்கு மூத்தவராக பலராமராக அவதாரம் செய்து, இக்கலிகாலத்தில் இராமானுஜராக அவதாரம் செய்த பெருமாளின் பாம்பணையாம் அயிரம் பணங்களார்ந்த ஆதி சேஷன் இளையாழ்வான் என்று கொண்டாடபப்டுகிறான். மேற்கு தொடர்ச்சி மலையே ஆதி சேஷன் என்பது ஐதீகம். அந்த ஆதிசேஷனின் தலை - திருவேங்கடம், முதுகு- ஸ்ரீ சைலம் வால்- அஹோபிலம் ஆகும்.

மேலும் அஹோபில திவய தேசத்தின் தரிசன்ம் பெற இங்கே செல்க

அஹோபிலம் யாத்திரை

இனி கஜேந்திராழ்வானைப் பற்றி ஒரு சிறு குறிப்பு ஆயிரம் வருடங்கள் தன் பலத்தின் மீதும் மற்ற தன் கூட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்து போராடிக்கொண்டிருந்த போது அவனுக்கு பெருமாள் உதவ முன்வரவில்லை. ஆனால் அதையெல்லாம் விடுத்து எப்போது அவன் அந்த ஆதிமூலத்திடம் பூரண சரணாகதி அடைந்த போது அடுத்த நொடியே கருடன் மேல் ஆரோகணித்து வந்து கஜேந்திரனுக்கு அருளினார் பெருமாள். எனவேதான் பராசர பட்டர் தமது போற்றியில் தங்களது கருணையை விட தங்களது அந்த வேகத்திற்காக தலை வணங்குகின்றேன் என்று பாடுகின்றார்.

இவையனைத்திலும் நாம் கற்கும் பாடம் கண்னன் கீதையிலே கூறிய படி

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ


அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ் யாமி மாசுச


அதாவது மோடசத்திற்கு உதவும் மற்ற எல்லா தர்மங்களையும் விடுத்து என்னை மட்டுமே உபாயமாக பற்றினால் உன்னை சகல பாவங்களிலும் விடுத்து உன்னை கடைத்தேற்றுவேன் என்று அருளிய படி பூரண சரணாகதி ஒன்றே நாம் உய்யும் வழி.

ஓம் நமோ நாராயணாய.

Sunday, July 13, 2008

கருட கம்பம்

Visit BlogAdda.com to discover Indian blogs

முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன், பூமன்னு மாது பொருந்திய மார்பன், மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பன், விஷ்ணு பகவானின் வாகனமான கருடனுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு அது என்னவென்றால வைஷ்ணவ ஆலயங்களில் கொடி மரம் கருட கம்பம் என்று அழைக்கப்படுகின்றது. பெருமாள் ஆலயங்களில் துவஜஸ்தம்பங்களில் பெரிய திருவடி நித்ய வாஸம் செய்வதால் அவை கருடஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது ஐதீகம் . பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற போது வெற்றிக்கு அறிகுறியாக நீ எனது கொடியிலும் விளங்குவாய் என்று வரக் கொடுத்தார் எனவே எம்பெருமானின் கொடியிலும் கருடனே விளங்குகின்றான்.
மேலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதை அறிவிக்கும் ஆற்றலும் கருடனுக்கே உள்ளது. கருட தரிசனம் மங்களகரமானது என்று கருடனின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


சபரி மலையில் மகர ஜோதிக்காக ஐயப்பனுக்கு அணிவிக்க பந்தள இராஜா அர்பணித்த திருவாபரணங்கள் கொண்டு வரப்படும் போது கருடன் வட்டமிட்டு வருவதை எல்லோரும் அறிவோம். அது போலவே பெரிய திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நடக்கும் போது கருடன் வந்து வட்டமிடும் என்பது உண்மை. ஒரு முறை திருமயிலை கபாலீச்சுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் மூன்று கருடன் வந்து இராஜ கோபுரத்தின் உயரே கருடன் வந்து வட்டமிட்டதை அடியேன் அனுபவித்துள்ளேன். இவ்வாறு மங்கள்த்திற்கு அறிகுறியாக விளங்குபவர் கருடன்.


மய்யோ! மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ ஐயோ! இவன் வடிவழகென்பதோர் அழகுடைய எம்பெருமானின் எதிரே சேவை சாதிப்பவர் தான் கருடன். எவ்வாறு நிலைக் கண்ணாடி தன் எதிரே உள்ள பிம்பத்தை பிரதிபலிக்கின்றதோ அது போல எம்பெருமானின் திவ்ய சொரூபத்தை, திவ்ய கல்யாண குணங்களை காட்டியருள்பவர் கருடன்.


ஆகமம் என்றால் வருகை என்று பொருள். உபதேச வழியாக வருபவை அவை. ஆன்மாக்கள் மோட்சம் அடைய மல நாசம் செய்பவை ஆகமங்கள். திருக்கோவில் கட்டுவதற்கு நிலம் தேர்ந்தெடுப்பது முதல் பூஜை முறைகள் முடிய அனைத்தும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. ஆகமங்களின் படி ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட திருவிழாக்களின் போது கொடியேற்றம் அவசியம். எனவே வைணவத்தலங்களில் பிரம்மோற்சவத்தின் போது என்பெருமானுடைய கொடியாகிய கருடக்கொடி ஏற்றப்படுகின்றது. அது ஏற்றப்படும் கொடிக்கம்பம் கருட கம்பம் என்றும் அழைக்கப்படுகின்றது. திருமலையில் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உரை மார்பன் மலையப்ப சுவாமியின் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கருடக்கொடி கருட கம்பத்தில் ஏற்றும் அழகைக் காணுங்கள்.
சில தலங்களில் இராஜ கோபுரத்திற்க்கு வெளியே எந்தப் பறவையும் பறக்க முடியாத உயரத்தில் பறக்கும் கருடனுக்கு ஒரு ஸ்தம்பத்தின் மேல் உயர்ந்த சன்னதி அமைக்கின்றனர். இவையும் கருட கமபம் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட இரண்டு உயர்ந்த கருட கம்பங்களை தரிசனம் செய்யலாம்.பூவராகர் - ஸ்ரீமுஷ்ணம்


மிக உயர்ந்த கருட கம்பத்தை நாம் ஸ்ரீ முஷ்ணத்தில் தரிசிக்கலாம். நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன், பந்திருக்கும் மென் விரலாள் பனி மலராள் வந்திருக்கும் மார்பன், எம்பெருமான் பூவராகராக எழுந்த்ருளி அருள் பாலிக்கும் அபிமான ஷேத்திரம்தான் ஸ்ரீமுஷ்ணம். இரண்யாக்ஷனை வதைத்து பூமி பிராட்டியாரை மீட்ட பெருமாள் இங்கே முஸ்லீம்களும் வணங்கும் பெருமாளாய் சேவை சாதிக்கின்றார் இத்தலத்தில். பெருமாளையும் ஏழு நிலை இராஜ கோபுரத்தின் உயரத்திற்கு இனையாக ஓங்கி உயர்ந்திருக்கும் கருட கம்பம்.
அதன் உச்சியில் உள்ள கருட மண்டபத்தில் கருடன் சேவை சாதிக்கின்றார். அந்த கருட கம்பத்தின் அழகைத்தான் கண்டு களியுங்களேன்.
சிறிய திருவடியான ஆஞ்சனேயர் ஸ்ரீஇராமாவதாரத்தின் போது இராமரின் தூத்ராக இலங்கைக்கு ஸ்ரீ சீதா பிராட்டியாரிடம் சென்றது போல, பெரிய திருவடியான ஸ்ரீ கருடன் கிருஷ்ணாவதாரத்தில் தாயாரான ஸ்ரீ ருக்மணி பிராட்டியார் எழுதிக் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு எம்பெருமானான ஸ்ரீ கிருஷ்ணனிடம் தூது சென்றவன் கருடன்.
பெருமாள் ருக்மிணி பெருமாட்டியாருடன் ஸ்ரீ வித்யா இராஜ கோபாலராய் கையில் செண்டாயுதம் ஏந்தி ஒய்யாரமாய் எழில் கொஞ்சும் குழந்தையாக எழுந்தருளி சேவை சாதிக்கும் இராஜ மன்னார்குடி அபிமான ஷேத்திரத்தில் உள்ள கருட கம்பம் இரண்டாவது உயரமான கருட கம்பம் ஆகும்.


மன்னார்குடி கருட கம்பத்தையும் கண்டு களியுங்கள்.


பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்? நல்வேங்கட


நாடர்நமக்கொருவாழ்வு தந்தால் வந்துபாடுமின்


ஆடும்சுருளக்கொடியுடையார் வந்தருள் செய்து


கூடுவாராயிடில் கூவி நும்பாட்டுக்கள் கேட்டுமே.


அடுத்த பதிவில் கருடன் கருடாழ்வான் ஆன சரிதத்தைக் காண்போம்.

Friday, July 11, 2008

கருட சேவை-7

Visit BlogAdda.com to discover Indian blogs
தக்ஷிண பத்ராசலம் மேற்கு மாம்பலம்
கோதண்டராமர் கருடசேவைவையத்தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போல
தெய்வப்புள் ஏறிவருவான் சித்திரக்கூடத்துள்ளானே - திருமங்கையாழ்வார்

தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மையுடையவர். மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.


மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விள்ங்குகின்றார்.


இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர். ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர். அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.


கருடன் வேறு, பகவான் வேறு என்று நினைக்க வேண்டாம். பகவானே கருடனாக அவதரித்து விஷ்ணு என்றும் கருடன் என்றும் பெயர் பெற்றார் என்று மஹாபாரதம் கூறுகின்றது.கருடன் எம்பெருமானின் வாகனமாக எவ்வாறு ஆனார் என்பதற்கு இரு ஐதீகங்கள் வழங்குகின்றது அவை என்ன என்று பார்ப்போமா? சப்த ரிஷிகளில் ஒருவரான காசயபர் ஒரு சமயம் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். அதற்கு பல மஹரிஷிகள் எழுந்தருளியிருந்தனர். ஒவ்வொரு மஹரிஷியும் தங்களது சக்திகேற்ப அவ்வேள்விக்கு உதவி புரிந்தனர். இம்மஹரிஷிகளில் வாலகில்யகர்கள் என்று சொல்லப்படும் மஹரிஷிகளும் இருந்தனர். இவர்கள் அறிவிலும், தவத்திலும் சிறந்தவர்கள் ஆனால் உருவத்தில் மிக மிகச் சிறியவர்கள். இவர்கள் வேள்விக்காக சிறு ஸமித்துக்களை எடுத்துக் கொண்டு வரும்போது குளம்படியளவுள்ள நீர்த்தேக்கத்தை கண்டு அதை கடக்க முடியாமல் நின்ற போது , அவ்வழியில் தேவராஜன் இந்திரன் ஐராவதத்தில் அவ்வழியாக சென்ற்வன் இவர்களைப் பார்த்து கேலியாக சிரித்தான். இதனால் கோபமடைந்த இவர்கள் இப்படி செருக்குடன் செல்லும் இந்திரனே உனனையும் அடக்கி ஆளக்கூடிய மாவீரன் ஒருவன் பிறப்பான் அவனால் உனக்கு படுதோல்வி ஏற்படக் கடவது என்று சாபம் கொடுத்தனர். பிறகு வாலகிய மஹரிஷிகள் பெரும் தவம் இயற்றி அத்தவத்தின் பயனாய்த் கசயபர் விநதைக்கு மகனாக கருட பகவான் பிறந்தார்.


கொற்றப்புள்ளொன்றேறி மன்றூடே வருகின்ற


காரைக்கால் திருமலைராயன் பட்டிணம் வீழி வரதராஜப் பெருமாள்

இரண்டாவது ஐதீகம் , தன் தாயாரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்ற கருடன் இந்திரனை தோற்கடித்து அமிர்த குடம் பெற்று திரும்பி வரும் போது ஒரு மரத்தல் வேகமாக உட்கார்ந்தான். அப்போது அம்மரத்தில் தூங்கிக்கொண்டிருந்த வாலகிய முனிவர்கள் மரம் ஆடிய வேகத்தில் விழுந்து விட்டனர், இதைக் கண்ட கருடன், வெகு கரிசனத்துடன் அவர்களை தூக்கி மரத்தின் மேல் விட்டான். இதனால் மகிழ்ச்சி அடைந்த மஹரிஷிகள் கருடனை நீ பகவானின் வாகனமாகும் பேறு பெருவாய் என்று வாழ்த்தி வரம் கொடுத்தனர். இவ்வாறு வீரம், பலம், கருணை, சாதுர்யம், ஞானம், வேகம், நிதானம், அழகு மிகுந்த கருடன் பெருமாளின் வாகனமானார்.
கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள். இவரது நட்சத்திரம் சுவாதி. பெருமாளுக்கு எப்போதும் சேவை புரியும் நித்ய சூரிகளில் ஒருவர் கருடன்.தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனை செங்கலமலக் கண்ணானை
நாவாயுளானைநரையூரில் கண்டேன்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்அண்டமும் சுடரும் அல்லாவாற்றலும் ஆய எந்தை ஆதி கேசவர் கருட சேவை

பெரும்பாலும் திருக்கோவில்களில் கருடன் நின்ற கோலத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். சில தலங்களில் அமர்ந்த கோலத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். மிகக்குறைவான திருத்தலத்தில் கையில் அமிர்த குடத்துடன் உள்ள கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கருடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலங்களைப்பற்றி இன்னொரு பதிவில் காண்போம்.


கருட சேவை தொடரும்...............