Tuesday, December 31, 2013

திருப்பாவை # 30

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:


வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

பொருள்:பாற்கடலைக் கடைந்து அமுதளித்த மாலவனை, மாதவனை, கேசவனை, கோபாலனை, நிலவொத்த அழகு முக கோபியர்கள், அணி சூடிய அரிவையர்கள், மார்கழி நோன்பு முடித்து சென்று அந்த பெருமான் அருள் பெற்ற வரலாற்றை "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" பாடியருளினாள்.


மாலை சூடிய ஸ்ரீ வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் திருமகளாம் கோதை பாடிய இந்த தூயதமிழ் பாசுரங்கள் முப்பதையும் தவறாமல் நாளும் சேவிப்பவர்கள், மலையன்ன தோளன், செந்தாமரைக் கண்ணன், செல்வக் கோமான் கோவிந்தன் அருள் பெற்று அளவிலா ஆனந்தமும் அடைவர்.


கூர்ம அவதாரம்

நாம் எல்லோரும் உய்ய எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் பத்து அவற்றில் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரத்தை இந்த பாசுரத்தில் பாடியுள்ளார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தங்கள் குலம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட்ட தேவர்கள் தங்கள் குறையை பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டனர், அவரும் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் சென்றார். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு எய்தலாம் என்று மாலவன் கூறினார். தேவர்கள் மட்டும் பாற்க்கடலைக் கடைவது கடினம் என்பதால் அசுரர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்ய முதிவு செய்யப்பட்டது. மந்தார மலையை மத்தாக்கவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முடிவு செய்யப்பட்டது. திருமால தந்திரமாக தேவர்களை வால் பக்கமும், அசுரர்களை தலைப்பக்கமுமாக இருந்து கடையச்செய்தார். இவ்வாறு பாற்கடலைக் கடைந்த போது திருமால் ஆமை வடிவம் எடுத்து மந்தார மலையைத் தாங்கினார் என்பது புராண வரலாறு.

தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்த போது முதலில் கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் வந்தது, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தைக் கக்கியது. இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி உலகம் முழுவதையும் சூழ்ந்து, தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு அவர் கழுத்திலே தாங்கி தேவர்கள் முதல் அனைத்து ஜீவ ராசிகளையும் காத்தார். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட திருமகளை மஹா விஷ்ணு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வெளிப்பட்ட ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி,கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைர்வம் என்னுன் குதிரை ஆகியவற்றை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வந்தது மஹா விஷ்ணு, தன்வந்திரி வடிவில் ஏந்தி வந்தார். தேவரும், அசுரரும் அமுதம் முதலில் பெற குழப்பம் விளைவித்தனர், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார் திருமால். இவ்வரலாற்றை இந்த நிறைவுப் பாசுரத்தில் "வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை " என்று பாடுகின்றார் ஆண்டாள்.


"கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் பாடி நோன்பு நோற்பவர்கள் , திருமாலின் திருவருள் பெறுவர் என்று நூலின் ப்லனையும், நோன்பின் பயனையும் ஒருங்கே உணர்த்துவது போல், திருமால வங்கக் கடல் கடைந்து திருமகளைப் பெற்ற வரலாற்றுடன் திருப்பாவையை நிறைவு செய்கிறார் ஆண்டாள்

ஆண்டாள் திருவடிகளே சரணம்திருப்பாவை முற்றும்


திருப்பாவை தனியன்கள்


கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


மாதங்களில் சிறந்த மார்கழியின் முப்பது பாசுரங்களையும்  வந்து வாசித்து இன்புற்ற அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் ஆண்டாள் திருவடிகளில் சமர்ப்பணம்.

அன்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு (2014) நல்வாழ்த்துக்கள்.

Labels: , ,

Monday, December 30, 2013

திருப்பாவை # 29 (பரிபூர்ண சரணாகதி)

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.............(29)


பொருள்:கோவிந்தா! விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்க.

பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் பிறந்த நீ உன்னைச் சரணடைந்த உன் அடியவர்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது தகுதியாகாது.

இன்று மட்டுமல்ல( இப்பிறவி) என்னும் எத்தனை ஜென்மம் நாங்கள் எடுத்தாலும் உன்னோடு கூடியிருப்போம், உனக்கே அடிமைகளாகி சேவை செய்வோம். மற்ற எந்த விருப்பங்களும் மனத்தில் எழாமல் ஆட்கொண்டு அருள் பரந்தாமா!


கோவிந்தன்: மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீஎன்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ் சீர் கோவிந்தா என்றும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை என்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

திரௌபதி  நிர்க்கதியாக கௌரவர் சபையில் தவித்தபோது அவளைக் காத்த இந்த "கோவிந்தன்" என்ற திருநாமத்தை 27ல் கூடாரை வெல்லும் கோவிந்தா, 28ல் குறையொன்றும் இல்லாத கோவிந்தா, 29ல் கோவிந்தா என்று அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் போற்றியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.


பூரண சரணாகதி தத்துவத்தை , திருப்பாவையின் சாரத்தை விளக்கும் பாசுரம்.

Labels: , , ,

Sunday, December 29, 2013

திருப்பாவை # 28

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:


குறையொன்றும் இல்லாத கோவிந்தன்கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)பொருள்: இறைவா! உன் அடிமைகளாகிய நாங்கள் இடையர்கள்! கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்ப்பவர்கள், அதில் களிப்புறும் அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆய்குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதனால் நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கின்றோம்.

"ஸ்ரீ:ப்பதியாய் விள்ங்குவதால் "குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா" உன்னுடன் உண்டான இந்த உறவு இனி ஒரு பொழுதும் மாறாது. கள்ளமற்ற காரிகைகளாகிய நாங்கள்! அன்பு மேலீட்டால் உன்னை மற்ற சிறுவர்களை அழைப்பதைப் போல் உன்னையும் அழைப்பதனால் கோபம் கொள்ளாதே அருளாளா! எங்களை காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரம் தருவாயாக.
குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் வளர்ந்தவன் கண்ணன் என்பதால் கோவிந்தன் என்றும் பெரிய பிராட்டியாரையே தன் வல மார்பில் கொண்டுள்ளதால் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்றும் பாடுகின்றார் ஆண்டாள். திருமால் திருமகளை அடைந்த கூர்ம அவதார வரலாற்றை முப்பதாம் பாசுரத்தில் காண்க.

Labels: , ,

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -4

Visit BlogAdda.com to discover Indian blogs
திருமஞ்சனம்   

ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரங்களை கேட்டு அனுபவித்த பின் பெருமாள்கள் அனைவரும் தங்களுடைய மண்டபங்களுக்கு எழுந்தருளினர். பின்னர் ஆழ்வாருக்கும் எல்லா பெருமாள்களுக்கும் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது. திருமஞ்சனம் நிறைவு பெற்ற பின் பெருமாளின் தீர்த்தம் அனைஅவ்ருக்கும் கிட்டியது. பின்னர் எளிய அலங்காரத்தில் அனைத்து பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். நம்மாழ்வார் அருகே அன்பர்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி, மற்றும் திருவாய்மொழியின் நவதிருப்பதி திவ்ய தேசங்களின் 100 பாசுரங்கள் சேவித்தனர்.   சில பெருமாள்களின் அந்த அற்புத கோலத்தை இந்த பதிவில் காணலாமா அன்பர்களே  தொலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி) 
செந்தாமரைக் கண்ணன்


நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொரு நல்வடகரை வண் தொலைவில்லி மங்கலம்
நோக்கு மேல், அத்திசை அல்லால் மறு நோக்கு இலள்; வைகல் நாள் தொறும்
வாய்க் கொள் வாசகமும் நாமமுமே இவள் அன்னைமீர்!


 தாய்மார்களே! குளிர்ந்த தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ள தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலம் மிகவும் செழிப்பானதாகும். அங்கு இவள் பார்க்கும் இடங்கள் தோறும் கரும்புகளும், செந்நெல்லும், உயர்ந்த செந்தாமரைகளும் நிறைந்திருக்கின்றன. இவள் அத்தலத்தைப் பார்ப்பாளேயானால் அத்திசையையன்றி வேறு ஒரு திசையையும் பார்த்து அறியாள். அனு தினமும் இவள் வாயில் வைத்து பேசும் சொற்களும் நீலமணி வண்ணனின் திருப்பெயர்களே ஆகும்.  

இரட்டைத் திருப்பதி தேவர் பிரான் மதுர கவியாழ்வார்

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.

என் வாயினால் நம்மாழ்வாதை துதித்து ஆனந்தத்தை பெற்றேன். அவருடைய அழகிய திருவடிகள் பொருந்த்ப்பெற்றேன்; இது சத்தியம். ஆழ்வாரைத் தவிர வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன். திருநகரிக்கு தலைவரான அவாழ்வாருடைய அருளிச்செயல்களின் இனிய இசையையே பாடிக்கொண்டு திரிவேன் அடியேன்.   

,  
திருக்கோளூர் நிக்ஷோபவித்தன்


பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே  கூவி எழும் என்
பாவை – போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு என் செய்யுங்கொலோ?

என் மகள் தன்னுடன் விளையாட வைத்துக் கொண்ட பூவைகள், பச்சைக்கிளிகள், பந்து, சிறிய மரப்பாணை, பூங்கூடை ஆகியவற்றைப் புறக்கணித்து, அவற்றால்  வரும் இன்பம் எல்லாம் ’திருமால்” என்னும் நாமத்தை கூறுவதால் வருமென்று அதனையே கூறுகின்றாள். அதனால் ஏற்றம் அடையும் அவள் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருக்கோளுர்க்குப் புறப்பட்டு சென்றாளே! அங்கு அடைந்திருப்பாளோ?  அங்கு சென்றதும் தன் கோவைக் கனிகள் ஒத்த  உதடுகள் துடிக்க தாரைதாரையாய் கண்ணீர் விழ என்ன செய்கின்றாளோ?   

ஆழ்வாரும் பெருமாளும் 

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் 

நத்தம் எம் இடர் கடிவான்


                                                                           புளிங்குடி காய்சினவேந்தன் பவளம் போல் கனிவாய் சிவப்ப, நீ காண வந்த, நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து, நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய்
பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல்  தண் திருப்புளிங்குடி கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சின பறவை ஊர்ந்தானே!


கஜேந்திரன் என்னும் யாணையின் துன்பத்தை தீர்த்த பெருமானே! கவளமாக உணவு கொள்ளும் அந்த யானை தடாகத்துக் கரையில் முதலையால் துன்பம் அடையவும், அத்துன்பத்தை நீக்கச் சினம் கொண்ட கருடப் பறவியின் மீது ஊர்ந்து தோன்றியவனே! பவளக் கொடிகளின் கீழே சங்குகள் திரண்டு காணப்படும்  தாமிரபரணியின் கரையிலுள்ள திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே! பவளம் போன்ற உன் உதடு சிவந்து தோன்ற பல்லாகிய வெண் முத்துக்கள் ஒளிபரப்ப, தாமரைக் கண்கள் விளங்கப் புன்னகை செய்தவாறு வந்து நீ அருள் செய்ய வேண்டும்.   


கள்ளர் பிரான் எம் இடர் கடிவான் காய்சினவேந்தன்  

கருட சேவை

கருட சேவை அலங்காரம் செய்த பட்டர்

ஆழ்வார் திருநகரியில் உள்ள சில அற்புத சிலைகள்

திருக்குருகூர் ஆலயம் ஒரு சிறந்த கலைக் கூடம், அற்புதமான கற்சிலைகள் ஆலயம்முழுவதும் நிறைந்துள்ளன. தாங்கள் மண்டபத்தின் தூண்களில் உள்ள சில அற்புத சிற்பங்களை இப்பதிவில் காணுகின்றீர்கள். கேரள நாட்டில் உள்லது போல் கை விளக்கேந்திய பெண் சிற்பங்கள் பல வித குரங்குகள் ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம்.   நம்மாழ்வார் சன்னதியில் உள்ள இராமாயண சிற்பங்கள் மிகவும அருமை. 


இரவு கருட சேவைக்காக பெரிய திருவடிகள் தயார் நிலையில் உள்ளனர்.  எல்லா ஆலயங்களிலும் ஒரு திருவாசி இருக்கும் இங்கு மட்டும் எல்லா கருட வாகனங்களிலும் சிறப்பாக  அலங்காரம் செய்வதற்காக இரண்டு திருவாசிகள் இருப்பதை கவனியுங்கள்.  நம்மாழ்வார் பவனி வர அன்ன(ஹம்ச) வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

பெரிய திருவடிநம்மாழ்வாருக்கு ஹம்ச வாகனம் 

Labels: , , ,

Saturday, December 28, 2013

திருப்பாவை # 27 ( கூடார வல்லி)

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.   (27)


பொருள்: உன்னை கூடி மகிழாத ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வென்று அடிமைப்படுத்தும் குணக்குன்றே கோவிந்தா!

இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அவனி மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் அடைந்திடுவோம்.

நோன்பிற்காக ஒதுக்கிய அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம், தோள் வளையங்கள் அணிவோம், தோடணிவோம்,கைகளில் வளையல்கள் அணிவோம், செவிப்பூவால் சிறப்போம், கால்களில் பாடகம் அணிவோம் இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம், புது பட்டாடையணிவோம்.

இவையெல்லாம் எதற்காக தெரியுமா? எம்பெருமானே! பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய "குறையொன்றும் இல்லாத கோவிந்தன்" உன்னுடன் கூடி உண்ணவே. மனம் குளிர்ந்து நீ எங்களுக்கு அந்த பாக்கியத்தை அருள்வாயாக!

கோவிந்தன்:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை "பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" (பா. 29 ) என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை "கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா" என்னும் இப்பாசுரத்தின் வரிகளாலும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (பா.15 ) என்னும் இரண்டு பாசுரங்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள். "கூடார வல்லி" தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி மற்ற கோபிகையர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்த குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தனுடன் கூடிய நாள்.

Labels: , ,

Friday, December 27, 2013

திருப்பாவை # 26

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்............(26)


பொருள்: மாலவனே! கருமை நிறக் கண்ணா! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று எடுத்துரைக்கிறோம். கேள்.

படைப்போர்புக்கு முழங்கும் உன் இடக்கையில் விளங்கும் பாஞ்சசன்னியத்தை போல் முழங்கும் சங்கம் வேண்டும். பெரும் முரசுகள் வேண்டும். உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடும் கலைஞர்கள் வேண்டும். அழகிய மங்கள தீபங்கள் வேண்டும்.ஆடிப்பறக்கும் கொடிகள் வேண்டும்.பனி படாமல் எங்களைக் காக்க எங்கள் தலை மேல் கூரையும் வேண்டும்.பாலனாக ஆலிலையில் பள்ளிகொண்ட பரந்தாமா! இவற்றை எங்களுக்கு நீ அருள்வாயாக.

ஆலினிலையாய்: பிரளய காலத்தில் சகல அண்டங்களையும் தனது வயிற்றில் அடக்கி சிறு குழந்தையைப் போல ஆலிலையில் பள்ளி கொள்ளும் மாயன்

Labels: , , ,

திருப்பாவை # 25

Visit BlogAdda.com to discover Indian blogs
ஸ்ரீ:

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கில னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்............(25)


பொருள்: வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஒரு இரவிற்குள்ளாகவே கோகுலத்தில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த எம் கண்ணனே! கேடு நினைத்த கம்சனுக்கு நெருப்புப் போல இருந்தவனே! உன் அடிமைகளாகிய நாங்கள் உன்னை வேண்டி வந்துள்ளோம். எங்களுக்கு தேவயானவற்றை அளிப்பாயாக. அவ்வாறு நீ எங்களை ஆட்கொண்டால் உனக்கு சேவை செய்து உன் புகழ் பாடி வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

தேவகி மைந்தன் யசோதையின் மகன் ஆனது:

கண்ணன் பிறப்பு, வளர்ப்பு, செயல்கள் அனைத்துமே இனியவை. அவன் தேவகியின் மகனாய் பிறந்தவன். இறைவனையே பிள்ளையாகப் பெற அவள் பெற்ற பேறு பெரியது, ஒப்பற்றது. அவள் பிள்ளை பெற்ற அந்த இரவும் ஒப்பற்றது. சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படவேண்டிய கண்ணனின் பிறப்பு சிறைக்குள் நிகழ்ந்தது. கண்ணனை ஓர் இரவு கூட மதுராவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இரவோடு இரவாக பால கிருஷ்ணரை நந்த குலத்திற்கு எடுத்து சென்றார் வசுதேவர்.விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக்கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதி சேஷன் வந்து குடைப் பிடித்தான்.பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்து சிறை திரும்பி வந்தார்; சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். அந்தக் குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்கு பறந்தது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை மாயாவாக  மாறி உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மையை உணர்த்தி மறைந்தது.இத்தனையும் நிகழ்ந்தது ஓர் இரவில் அந்த இரவு ஒப்பற்ற இரவு.


கண்ணனை தன் கண்ணின் மணியாக வளர்த்தாள் யசோதை. கண்ணன் ஒளிர்ந்து வளர்வதை அறிந்த கம்சன் அவனைக் கொல்ல கருதி, சகடம், கொக்கு, கன்று, குதிரை, விளாமரம், குருந்த மரம், பூதனை முதலிய பல அசுரர்களை அனுப்பினான் அனைவரும் கண்ணால் வதம் செய்யப்பட்டனர். வில் விழாவிற்கு கண்ணனையும், பலராமரையும் அழைத்து, மல்லர்களையும், குவலயாபீடத்தியும் ஏவி கொல்ல முயற்சி செய்தான் அதுவும் வீணானது. இவ்வாறு கம்சனைன் அனைத்து செயல்களையும் முறியடித்து அவனையும் கண்ணன் வதம் செய்து அவன் வயிற்றில் நெருப்பாக நின்றான் என்பதை  பட்டர் பிரான் கோதை

"ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென நின்ற நெடுமாலே" என்று  அழகு தமிழில் பாடுகின்றார் இப்பாசுரத்தில்.

Labels: , ,

ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -3

Visit BlogAdda.com to discover Indian blogs
மங்களாசாசனம் 

ஆழ்வார் திருநகரி தோரண வாயில் சிந்தையாலும் சொல்லாலும்  செய்கையினாலும்
 தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த
 வண்குருகூர்ச் சடகோபன்


 ஆழ்வாரின் தேன்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க வந்து மண்டபத்தில்
 காத்திருக்கும்  ஆறு  திருப்பதிகளின்  பெருமாள்கள்ஸ்ரீவைகுண்டம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்த பெருமாளையும்,   உறங்குவான் போல் யோகு செய்த புளிங்குடிப் பெருமானையும் ,  கூந்தல்மலர் மங்கைக்கும்  மண்மடைந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் வரகுணமங்கை பெருமாளையும்  ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பின் அவர்கள் அந்த ஆனந்தத்தில் கோவிலுக்குள் ஆடிக்கொண்டே எழுந்தருளுகின்றனர்.  பின்னர் ஆழ்வாருக்கு  சேவை சாதிக்க இரண்டு பெருமாள்கள் வருகின்றனர்இவர்கள் நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல்லோங்கு செந்தாமரை வாய்க்குந் தண்பொருநல் வடகரை வண் தொலிவில்லி மங்கலம் என்னும்  இரட்டைத் திருப்பதியின் ஸ்ரீனிவாசன் – தேவர்பிரான்அரவிந்த லோசனர் -  தாமரைக் கண்ணன்  பெருமாள்கள் ஆவர். முன்னரே கூறியது போல திவ்ய தேசம் என்று பார்த்தால் தொலைவில்லி மங்கலம் ஒரே திவ்யதேசம்நவதிருப்பதி என்று பார்க்கும் போது இரண்டு திருப்பதிகள்.

இரட்டைத் திருப்பதி செந்தாமரைக் கண்ணன்
சிந்தையாலும் சொல்லாலும்  செய்கையினாலும் தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த வண்குருகூர்ச் சடகோபன் தன்னிலையிழந்துஆண் தன்மையினை விட்டுநாயிகா பாவத்தில் பராங்குச நாயகியாய் காதலனை கூட விரும்பும் காதலி நிலையில் உள்ளதை  தோழி தாய்மாரை நோக்கிக் கூறும்  பாசுரத்தாலே ஆழ்வார் எம்பெருமானிடத்து ஈடுபட்டமையை பேசும் பாவனையில்   இந்த திவ்ய தேசத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருந்துவேதமும்வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந்
திருந்துவாழ்பொருநல் வடகரைவண்தொலைவில்லிமங்கலம்
கருந்தடங்கண்ணிகைதொழுத அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும்
இருந்திருந்தஅரவிந்தலோசன! என்றென்றே நைந்திரங்குமே.

தாய்மார்களேதாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ளது வளம் பொருந்திய திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலம்இங்கு திருந்திய வேதங்கலும் யாகங்களும் செல்வமும் நிறைந்துள்ளனபிராமணர்கள் நிறைந்து வாழ்கின்றனர்அத்திருத்தலத்தை கரிய  விசாலமான கருணை பொங்கும் கண்களையுடைய இவள் கைகூப்பி வணங்குகின்றாள்அந்நாள் தொடங்கி  இந்நாள் வரையில்  தாமரைக் கண்ணாஎன்று என்றே உருக்குலைந்து மனமும் கரைகின்றாள்.

இப்பாசுரத்தில் பெருமாள் அரவிந்த லோசனர் – தாமரை கண்ணன்தாயார் கருந்தடங்கண்ணி மற்றும் திருப்பதி தொலைவில்லி மங்கலம் மூன்றையும் ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

குமுறுமோசைவிழவொலித் தொலைவில்லிமங்கலம்கொண்டுபுக்கு
அமுதமென்மொழியாளை நீருமக்குஆசையின்றியகற்றினீர்
திமிர்கொண்டாலொத்துநிற்கும் மற்றிவள் தேவதேவபிரானென்றே
நிமியும்வாயொடுகண்கள்நீர்மல்க நெக்கொசிந்துகரையுமே

தாய்மார்களேபல்வகையான ஓசைகள் முழங்கத் திருவிழாக்காணும் தலம் திருத்தொலைவிலி மங்கலம் ஆகும்அமுதமாய் இனிய வார்த்தை  பேசும் இப்பேதையை  அத்திருத்தலத்திற்குக் கொண்டு புக்கு அகன்று போகும்படி செய்து விட்டாயிற்றுஇனி உமக்கு அவளைத் திரும்பப்பெற ஆசை இருந்து ஒரு பயனும் இல்லைஇவளோஅனுபவிக்க வேண்டிய விஷயத்தை  அனுபவிக்கவும் மாட்டாதே செயலற்ற  நிலையில் நிற்கின்றாள்இவள் இதற்கு மேல் பேசினால் “ தேவ  தேவ பிரான் “ என்று கூறி உதடு நெளிகிற வாயுடன் கண்களின் நீர்நிரம்ப நெகிழ்ந்து கரைந்து உருகின்றாள்.  

பெருமாளோ தாமரைக் கண்ணன் அந்த திருத்தாமரைகளை மலரச்செய்கின்ற சூரியன் நம்மாழ்வார்அவர்  உபதேச முத்திரையால் நமக்கு அருள் வழங்குகின்றார்அவரை சரணாகப் பற்றிக்கொள்ள அவர் நம்மை வைகுண்டம் சேர்ப்பார் என்று அருமையாக விளக்கம் அளித்தார்  வேளுக்குடி ஸ்ரீ .வேக்ருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்கள்.  இதையே  ஆழ்வாரும் தனது பாசுரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.


இரட்டைத் திருப்பதி தேவர் பிரான் 

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வர் திருமாலுக்கே.

வளமான திருக்குருகூரிலே உள்ளவர்களுக்குத் தலைவரானவர் ஸ்ரீசடகோபர் ஆவார்அவர் தேவபிரானையே தந்தை தாய் என்று மனம்மெய் வாக்கு என்ற மூன்றாலும்  அடைந்தவர்அவர் அருளிய பழமையான ஆயிரம் பாசுரங்களுள்திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலத்தைப் பற்றிச் செந்தமிழால் அருளிச்செய்த இந்தபத்து பாசுரங்களை சேவிப்பவர்கள்  (வைகுண்டத்தில்திருமாலுக்கு அடிமையாக சேவை  செய்வார்கள்

முன் போலவே மாலைபரிவட்டம்  சடாரிகற்பூர ஆரத்தி நடைபெற்றபின் ஆழ்வாரின் பாசுரங்களை கேட்ட ஆனந்தத்தில் பெருமாள்கள் இருவரும் ஆடிக்கொண்டே திருக்கோவிலின் உள்ளே எழுந்தருளினர்.  ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் 
 திருவடி சரணம் (செந்தாமரை)கண்ணா 


                                                       

                                                         தென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் 


அடுத்து வேதவொலியும் விழாவொலியும் பிள்ளைக்குழா விளையாட்டொலியும் மறாத் தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணர் வகுளாபாரணருக்கு சேவை சாதித்தார்இவரை ஆழ்வார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

நகரமும்நாடும்பிறவும்தேர்வேன் நாணெனக்கில்லைஎன்தோழிமீர்காள்
சிகரமணிநெடுமாடநீடு தென்திருபேரெயில்வீற்றிருந்த
மகரநெடுங்குழைக்காதன்மாயன் நூற்றுவரையன்றுமங்கநூற்ற
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என் நெஞ்சங்கவர்ந்தென்னையூழியானே.

என்னுடைய தோழிகளே! (எம்பெருமானைநகரங்களிலும் நாடுகளிலும் பிறஇடங்களிலும் தேடுவேன்எனக்கு நாணம் இல்லைஏன்என்றால் சிகரங்களையுடைய  அழகிய நீண்ட மாடங்கள் நிலைத்திருக்கின்தென்திருப்பேரையில் எழுந்தருளியிருக்கின்ற மகரநெடுங் குழைக்காதனும் மாயனும் துரியோதினாதியார்கள் அன்று அவியும்படியாக மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும்சக்கரத்தண்ணலனுமான பெருமான் என் மனத்தினைக் கொள்ளை கொண்டு எத்தனை ஊழிக் காலத்தை உடையான்?

தென்திருப்பேரை பெருமாள் மகரநெடுங்குழைக்காதர்மகர மீன் வடிவத்தில் உள்ள நீண்ட குழை என்னும்  காதணியை அணிந்த  பெருமாள்  பராங்குச நாயகியின்  உள்ளத்தை கொள்ளை கொண்டான்  ஆகவே அவள்    தாய்மாரும் தோழிமாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரைக்குச் செல்வேனென்று துணிந்ததை கூறும் வகையில் செல்லுவன்  என்று கூறுகிறார் என்றும்,  பொதுவாக மாயம் என்றால் பொய் ஆனால் வைணவ சம்பிரதாயத்தில் மாயம் என்றால் ஆச்சரியம், நாம் மீண்டும் கருக்குழியில் புகாமல் நம்மை காப்பவர் ஆழ்வார் எனவே அவரது திருப்பாதங்களை பற்றுவோம்  என்று  அருமையாக விளக்கம் அளித்தார்  வேளுக்குடி ஸ்ரீ .வேக்ருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்கள்.  


 நிகரில் முகில் வண்ணன் பெருமாளின் கண்ணாடி சேவை 

தோளுக்கினியானில் பெருமாள்கள் 


திருக்குளந்தை மாயக்கூத்தர்அடுத்து மாடங்களையும் கொடிகள் கட்டிய மதிகளையுடைய அழகிய திருக்குளந்தை மாயகூத்தர் ஆழ்வாருக்கு சேவை சாதித்தார்.

கூடசென்றேன் இனி என் கொடுக்கேன்கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல்பறவை உயர்த்த வெல்வோர் ஆழிவலவனை ஆதரித்தே

என்று நம்மாழ்வார் தமக்கு உலக வாழ்க்கையில் வெறுப்புண்டானதைதலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி பேச்சாலே அவரை மங்களாசாசனம் செய்தார்.

மாடங்களையும் கொடிகள் அலங்கரிக்கும் மதில்களையுமுடைய அழகிய திருக்குளந்தை என்னும் திருத்தலத்தில் மேற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் திருக்கோலமாய் எழுந்தருளியுள்ளான் வண்மையுடைய மாயக்கூத்தன்கருடப்பறவையைக் கொடியியிலே  உயர்த்திய போரிலே வெல்லுகின்ற திருச்சக்கரத்தை வலக்கையிலேயே  உடையவன் எம்பெருமான்அப்பிரானை விரும்பி கலவியின் நிமித்தம் சென்றேன்என்னுடைய அழகிய வளையல்மனம், கண்கள், ஆடை ஆபரணங்கள் ஆகிய அனைத்தையும் என்னிடத்திலிருந்து நீங்கி ஒழிய இழந்து பலவகையான வளையல்களை அணிந்த இப்பெண்களுக்கு முன்னே நாணமும் நீங்கினேன்இனி எதனைக் கொடுப்பேன்?  என்று தோழியரின் முன்னர் தாம் நாணம் இழந்ததை கூறுகின்றார் நம்மாழ்வார்.


ஆழ்வாரின் திருமேனி தாமிரபரணி தீர்த்தத்தை காய்ச்சி  அதில் மதுரகவியாழ்வார் தன் சக்திகளை பிரயோகித்து உருவாக்கிய கைப்படாத  சுயம்பு திருமேனி ஆகும்.  


மங்களாசாசனம் செய்யும் நம்மாழ்வார் நம்மாழ்வார் பின்னழகு 


திருக்கோளூர் நிக்ஷேபவித்தன் பெருமாள் 


அடுத்து திருக்கோளூர் நிக்ஷேபவித்தன் பெருமாள்  சேவை சாதித்தார்செங்கண் கருமுகிலை  செய்யவாய் செழுங்கற்பகத்தை ஆழ்வார் இருப்புவளர்ச்சிஇன்பம் இவை எல்லாம் கண்ணனென்று உணர்ந்து  திருக்கோளூரிலீடுபட்டதைதலைவன் நகர் நோக்கி சென்ற தலைமகளைப் பற்றித் தாய் இரங்கும்  பத்து பாசுரத்தாலே மங்களாசாசனம் செய்துள்ளார்.

உண்ணுஞ்சோறுபருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள்நீர்மல்கி
மண்ணிணுளவன் சீர் வளம்மிக்கவனூர்வினவி
திண்ணம் என்னிளமான்புகுமூர் திருக்கோளூரே.

இளமானைப் போன்ற என் மகள் தனக்கு எல்லாம் கண்ணனே என்கின்றாள்அவள் உண்கின்ற உணவும்,  குடிக்கின்ற தண்ணீரும்வாய் மெல்லுகின்ற வெற்றிலையும் ஆகிய எல்லாமே கண்ணனாகிய எம்பெருமானே  என்று  திரும்பத்திரும்பக் கூறி கண்ணீர் விட்டு உருகுகின்றாள்;  அந்த எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களையும்அவனையே தனிச்செல்வமாக பெற்ற வளம் கொண்ட அவன் ஊரையும் பற்றிக் கேட்டுக்கொண்டு செல்கின்ற என் மகள் முடிவில் புகும் ஊரே திருக்கோளூர் ஆகும்நிச்சயம் என் பெண் திருக்கோளூர் புகுந்து விடுவாள்என்கிறார் திருத்தாயார்.  

திருக்கோளூரிலே புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிய திருமண்டலத்துடன்   பெருமாள் குபேரனுக்கு  செல்வமளந்த மரக்காலை தலைக்கு வைத்து கையில் அஞ்சன மை தடவி நிதி எங்கு இருக்கின்றது என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்நவ திருப்பதிகளில்  இரண்டு திருப்பதிகளில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிக்கின்றார் அவையாவன திருக்கோளூரும் புளிங்குடியும் ஆகௌம் இந்த இரு திருப்பதிகளையும் ஆழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்அந்த பாசுரம் இதோ

கொடியார்மாடக் கோளூரகத்தும்புளிங்குடியும்
மடியாதின்னே நீதுயில்மகிழ்ந்துதான்
அடியாரல்லல்தவிர்த்த அசைவோஅன்றேல் இப்
படிதான் நீண்டுதாவிய அசைவோபணியாயே

கொடிகள் அலங்கரிக்கும் மாடங்களையுடைய திருக்கோளூர்  என்ற திவ்ய தேசத்திலும்திருப்புளிங்குடி என்ற திவ்ய தேசத்திலும் இப்படி திருக்கண் வளர்ந்திருக்கின்ற பெருமாளேஇவ்வாறு பள்ளி கொண்டது பல அவதாரங்களை எடுத்து அடியார்களுடைய  துன்பத்தை நீக்கிய தளர்ச்சியோஅல்லாமல் த்ரிவிக்ரம அவதாரத்தில் இவ்வுலகத்தை தாவி அளந்த தளர்சியோஅருளிச்செய்ய வேண்டும் என்று வினவுகின்றார் ஆழ்வார்.

வைத்த மாநிதியாம் மசுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து  உரைப்பார் திகழ் பொன் – உலகு ஆள்வாரே.

திருக்கோளூர்ப் பெருமான் சேர்த்து வைத்த சேமநிதி போன்றவன்அந்த மசுசூதனனாகிய  என்பெருமானை கொத்து கொத்தாய் மலர்கள் மலரும் சோலைகள் சூழ்ந்த திருக்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாசுரங்களில் துதித்துள்ளார்அவற்றுள் இப்பத்து  பாசுரங்களையும் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோளூரை எண்ணி அவனை நெஞ்சில் பதித்துக் கொண்டு சொல்ல  வல்லவர்கள் உயர்ந்த பரமபதத்தை ஆள்வர்.


மதுரகவியாழ்வார் 


நம்மாழ்வாருக்கு அவர் தம் வாழ்நாளில் நிறைய பணிவிடைகள் புரிந்த மதுரகவியாழ்வார், இந்த திருக்கோளூர் திருத்தலத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக  விஷ்ணுநேசர் என்பவருக்கு புத்திரனாக அவதரித்தவர்.    இவர்   தமது குருநாதரான நம்மாழ்வாரை கடவுளாகக் கருதி தாம் பாடிய   “கண்ணி நுண் சிறு தாம்பினால்”  என்னும் பாசுரத்தினால் மங்களாசாசனம் செய்தார், நம்மாழ்வாரின் மாலை மதுரகவியாழ்வாருக்கு அணிவிக்கப்பட்டது.  அவரை வலம் வந்து உள்ளே செல்ல மங்களாசாசன  உற்சவம் சிறப்பாக நிறைவேறியது.      அடுத்த பதிவில் நவதிருப்பதி எம்பெருமான்களின் திருமஞ்சன சேவையை காணலாம் அன்பர்களே.   

Labels: , ,